குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த விவகாரம் - போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை | Kanyakumari Woman dies after Family planning operation

வெளியிடப்பட்ட நேரம்: 00:15 (12/02/2019)

கடைசி தொடர்பு:07:26 (12/02/2019)

குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்த பெண் உயிரிழந்த விவகாரம் - போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின்போது இறந்த பெண்ணின் உடலை வாங்கமறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். பெண் இறந்தது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆஷா


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கானவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் விஜய். ராணுவ வீரரான விஜய்யின் மனைவி ஆஷா (29). இவருக்கு கடந்த 3-ம் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. கடந்த 6-ம் தேதி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி ஆஷா இறந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கதறும் தாய்

மருத்துவர்களின் அலட்சியமும், தவறான சிகிச்சையும் ஆஷா உயிரிழக்க காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள் இரண்டாவது நாளாக  உடலை வாங்காமல் போராட்டம் நடத்தினர். ஆஷாவின் மரணம் குறித்து அவரின் தந்தை தங்கப்பன் ஆசாரிப்பள்ளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இயற்கைக்கு மாறான மரணம் என போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தங்கப்பன் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து ஆஷாவின் தந்தை தங்கப்பன் கூறுகையில், ``என் மகள் ஆஷாவுக்கும் விஜய்க்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார்.

போராட்டம்

இந்த நிலையில், இரண்டாவது பிரசவத்துக்காக கடந்த 2-ம் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தோம். 3-ம் தேதி சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருந்தனர். மருத்துவர்கள் கடந்த 6-ம் தேதி குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். 6-ம் தேதியிலிருந்து மரணம் என அறிவிக்கப்பட்ட 10-ம் தேதி வரை மகளைப் பார்க்க எங்களை அனுமதிக்கவில்லை. டாக்டர்கள் இரண்டாவதாகவும் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தெரிகிறது. 10-ம் தேதி காலை 7-மணியளவில் எனது மகளை ஸ்டெச்சரில் வைத்து எடுத்துச் சென்றனர். என்ன காரணம் எனக் கேட்டபோது உங்கள் மகள் மரணம் அடைந்துவிட்டதாக கூறினார்கள். என் மகளின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. குமரி மாவட்ட மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தால் தவறுகள் மறைக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, வெளி மாவட்ட மருத்துவர்கள் மூலம் உடற்கூராய்வு செய்வதுடன் முழுவதும் வீடியோ எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்றார்.