திருபுவனம் பா.ம.க பிரமுகர் ராமலிங்கம் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்ததோடு அதன் உரிமையாளரான தஞ்சாவூரைச் சேர்ந்த முகம்மது இப்ராஹீம் என்பவரையும் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்.இவர் பா.ம.க-வில் திருபுவனம் முன்னாள் நகரச் செயலாளராக இருந்தவர். ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மதப் பிரசாரம் செய்ததை இவர் தட்டிக் கேட்டார். இதற்காக ராமலிங்கம் கடந்த 5-ம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ராமலிங்கத்தின் மகன் ஷியாம் சுந்தர் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின் அடிப்படையி்ல் கடந்த 7-ம் தேதி 5 பேரையும், 9-ம் தேதி 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இந்த நிலையில், ராமலிங்கத்தைக் கொலை செய்தபோது பயன்படுத்தப்பட்ட காரை திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் நேற்று திருச்சி பாலக்கரையில் கைப்பற்றினர். இதையடுத்து காரின் உரிமையாளரான தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலைப் பகுதியைச் சேர்ந்த முகம்மது இப்ராஹீம் என்பவரை போலீஸார் கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முகம்மது இப்ராஹீமை விசாரித்த நீதிபதி, வரும் 20–ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் பலத்த போலீஸார் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
