மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியா? | Vijayakanth's wife Premalatha in Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (12/02/2019)

கடைசி தொடர்பு:07:40 (12/02/2019)

மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியா?

நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மதுரையில் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாயிருக்கிறது. 

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மதுரையில் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாயிருக்கிறது. 

பிரேமலதா

2019 - நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் அதற்கென குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இருக்கிறது. இதுதவிர, ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பிடித்துள்ளன. மேலும், இந்தக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய வாய்ப்புண்டு என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றன.

இது ஒருபுறமிருக்க... மறுபுறம், அ.தி.மு.க. கூட்டணியில் இணைவதற்கு பிற கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்தக் கூட்டணியில் பி.ஜே.பி., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் எனத் தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படி ஒருவேளை, அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெற்றால் அதற்கு 4 இடங்கள் ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. தே.மு.தி.க. தற்போதைக்கு 7 இடங்கள் கேட்டிருப்பதாகவும், அதில் 4 இடங்களை அ.தி.மு.க. ஒ.கே. செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மதுரையை தே.மு.தி.க. கேட்டிருக்கிறது. அப்படி ஒருவேளை, தே.மு.தி.க-வுக்கு மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டால், அங்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க-வுக்கு எதிராக மதுரையைக் கேட்கும் என்று சொல்லப்படுகிறது. 

கடந்த சில காலங்களாக விஜயகாந்துக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றுவருகிறார். தற்போதும் வெளிநாட்டில்தான் இருக்கிறார். இதனால் அவர் முழு அரசியலில் ஈடுபடமுடியாமல் சற்று ஓய்வெடுத்துவருகிறார். இந்த நிலையில்தான் பிரேமலதாவை நாடாளுமன்றத் தேர்தலில் களமிறக்க அக்கட்சித் தலைமை முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. தே.மு.தி.க. தொடங்கிய காலத்திலிருந்து பிரசாரங்கள், பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு வந்த பிரேமலதாவுக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் அக்கட்சியின் பொருளாளர் பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க