தி.மு.க - அ.தி.மு.க மோதல்... களேபரத்தில் முடிந்த காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கத் தேர்தல் | cooperative election clash in kanchipuram

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (12/02/2019)

கடைசி தொடர்பு:07:45 (12/02/2019)

தி.மு.க - அ.தி.மு.க மோதல்... களேபரத்தில் முடிந்த காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கத் தேர்தல்

சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் வாக்குச் சாவடியில் ஏற்பட்ட வன்முறையால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கத் தேர்தல்

சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் வாக்குச் சாவடியில் நேற்று கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெற்றது. கூட்டுறவுச் சங்கத் தேர்தல் நடந்துகொண்டிருந்த நேரத்தில் அ.தி.மு.க-வினர் வாக்குச் சாவடியில் தகராறு செய்து, வாக்குப் பெட்டியை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க மற்றும் அ.தி.மு.கவினரிடையே ஏற்பட்ட மோதலால் வாக்குச் சாவடி இழுத்து மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து வாக்குச் சாவடிக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தி.மு.க-வினரை எதிர்த்து அ.தி.மு.க-வினரும் அ.தி.மு.க-வை எதிர்த்து தி.மு.க-வினரும் மாறிமாறி கோஷம் போட்டனர். காவலர்கள் குவிக்கப்பட்டனர். ஆனால், பதற்றம் தணிவதாக இல்லை. இதைத் தொடர்ந்து சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் வாக்குச் சாவடியில் ஏற்பட்ட வன்முறையால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் அலுவலர் அறிவிப்பு ஒட்டப்பட்டது.

சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கித் தேர்தலில் 37 பேர் போட்டியிட்டனர். கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற அ.தி.மு.க பிரமுகர் மனோகரன் என்பவர் அ.ம.மு.க-வுக்கு சென்றுவிட்டார். அவருடன் 6 பேர் சென்றுவிட்டனர். அதில் ஒருவர் இறந்து விட்டார். இதனால் அ.தி.மு.க-வின் பலம் குறைந்து விட்டது. தி.மு.க-விலும் உட்கட்சி பூசல் காரணமாகக் கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிட்ட நபர்களின் மீது தி.மு.க-வினரே புகார் மனுக்களை அனுப்பினார்கள். இதனால் பெரும்பகுதி தி.மு.க வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

காஞ்சிபுரம்

கடந்த மூன்று மாதத்துக்கு முன்பு நடந்த கூட்டுறவுத் தேர்தலில் இதேபோன்று தகராறு ஏற்பட்டது. அதில் அ.தி.மு.க-வினர் வாக்குப் பெட்டியில் மையை ஊற்றினார்கள். பிறகு தேர்தல் நடத்த வேண்டி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடத்துவதாக கடந்த வாரம் காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கி திடீரென அறிவித்தது. உட்கட்சி பூசலால் தி.மு.க-வில் உள்ள பெரும்பகுதியினர் தேர்தல் வேலை செய்யவில்லை. அ.தி.மு.க-விலும் வேட்பாளர்களின் பலம் குறைந்து விட்டது. 18468 பேர் கூட்டுறவு வங்கித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியானவர்கள். அதில் வெறும் 461 பேர் மட்டுமே வாக்களித்த நிலையில், இந்த தேர்தல் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவினருக்கு கசப்பாய் இருந்தது. தி.மு.க., அ.தி.மு.க என இரண்டு கட்சிகளுக்கும் தேர்தல் நடப்பது பிடிக்கவில்லை. ‘அ.தி.மு.க-வில் கள்ள ஓட்டுப் போட்டுக் கொள்கிறார்கள். ஏற்கெனவே ஓட்டுப் போட்டு வாக்குச் சீட்டுகளை கொண்டு வந்துவிட்டார்கள். இதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது’ என தி.மு.க-வினர் குற்றம் சாட்டுகிறார்கள். அ.தி.மு.க-வினரோ, ‘நாங்கள் வாக்குச் சீட்டுகளைக் கொண்டு வரவில்லை. தி.மு.க-வினர்தான் கள்ள ஓட்டுப் போட முயன்றார்கள்’ எனக் குற்றம் சாட்டுகிறார்கள்.

தேர்தல்

இது குறித்து விவரம் அறிந்தவர்களிடம் பேசினோம். ``காஞ்சிபுரத்தில் தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் ரகசிய உடன்பாடு செய்து கொண்டுள்ளார்கள். இருவரும் சேர்ந்துதான் தேர்தலை நிறுத்தி இருக்கிறார்கள். தி.மு.க-வில் போட்டியிட்ட சந்துரு, ஜெகன், சுரேஷ், தமிழ்வானன், சுகுமார் ஆகிய ஒருசிலரே முக்கியமானவர்கள். பதிவான வாக்குகளில் 50 சதவிகிதம் தி.மு.க-வுக்கு கிடைக்கும் என்பதால், எப்படியும் வெற்றிபெற்றுவிடலாம் என அவர்கள் மனக்கோட்டை கட்டியிருந்தார்கள். நமக்குள் தலைவர், துணைத்தலைவர் ஆகிய பதவிகளை பிரித்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தார்கள். ஆனால், உட்கட்சியிலிருந்தே பிரச்னை வெடிக்கும் என அவர்கள் நினைக்கவில்லை. கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் பதினோரு பதவிகளில் ஒருவர் 6 பதவிகளையும், இன்னொருவர் 5 பதவிகளையும் எடுத்துக்கொள்ளலாம். தேர்தலை நிறுத்த வேண்டாம் என தி.மு.க-வினர் அ.தி.மு.கவினரிடம் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ‘நாங்க பெரும்பான்மையாக இல்லை. வாக்களிக்கவும் எங்க கட்சியில் ஆட்கள் இல்லை. இதனால் புதிய வாக்காளர்களை நிறுத்தி முதலில் இருந்தே தேர்தலை சந்திப்போம்.’ என அ.தி.மு.க சார்பில் தெரிவித்தார்கள்.

வாக்குச்சாவடி

தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளிலும் முக்கியப் புள்ளிகள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களை வளர விடாமல் தடுப்பதற்காகவே இந்தத் தேர்தலை நிறுத்திவிட்டார்கள். தேர்தலில் பிரச்னை ஏற்பட்டபோது அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசனோ, தி.மு.க எம்.எல்.ஏ எழிலரசனோ, தி.மு.க மாவட்டச் செயலாளர் சுந்தரோ அங்கு வரவே இல்லை. இருதரப்பினரும் சேர்ந்துதான் இந்த தேர்தலை நடத்த விடாமல் தடுத்திருப்பார்கள் என்பது அப்பட்டமாய் தெரிந்துவிட்டது. வெளியே அ.தி.மு.க தேர்தலைக் கலைத்தது போல இருந்தாலும், உள்வேலை பார்த்தது என்னவோ தி.மு.கதான்.” என்கிறார்கள்.

அறிவிப்பு

``குறுகிய காலத்திலேயே சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கித் தேர்தலை நடத்தி இருக்கக் கூடாது. 15 நாள்களாவது கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். தேர்தல் குறித்து உறுப்பினர்களுக்குச் சரியான தகவலைத் தெரிவிக்கவில்லை. எவ்வித விளம்பரமும் செய்யவில்லை.“ எனத் தேர்தல் குறித்து வங்கி உறுப்பினர்கள் தெரிவிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க