தண்ணீரை தேடி அலையும் சின்னத்தம்பி யானை...! | Chinnathambi elephant searching for water

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (12/02/2019)

கடைசி தொடர்பு:07:20 (12/02/2019)

தண்ணீரை தேடி அலையும் சின்னத்தம்பி யானை...!

உடுமலைப்பேட்டை அருகே, சின்னத்தம்பி யானை தண்ணீரை தேடி அலையும் காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்தம்பி


கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை விளை நிலங்களை சேதப்படுத்துவதாகக் கூறி, கடந்த மாதம் டாப்ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இடமாற்றம் செய்த சில நாள்களிலேயே, சின்னத்தம்பி தன் வாழ்விடத்தைத் தேடி வெளியில் வந்துவிட்டது. தொடர்ந்து தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி, சின்னத்தம்பி அலைந்து வருகிறது. இதனிடையே, சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். இதற்கு, கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. போராட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, ``சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் விடுவதில் சிக்கல் உள்ளது. எனவே, அதை முகாமுக்குப் பிடித்துச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று நீதிமன்றத்தில் வனத்துறையினர் கூறியுள்ளனர். சின்னத்தம்பியைப் பார்க்க சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகின்றனர். ஐஸ் வண்டி, தர்பூசணி என்று பல சிறுவியாபாரிகள் சின்னத்தம்பியால் கல்லா கட்டி வருகின்றனர்.

யானை


இந்த நிலையில், சின்னத்தம்பி மரங்களை சேதப்படுத்துவதாக பொய்ப் புகார் கூறப்படுவதாக சூழலியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கண்ணாடிப்புதூர் பகுதியில் சின்னத்தம்பி யானை தண்ணீரை தேடி சுற்றி வருகிறது. அருகில் உள்ள குழாய்களில் எல்லாம் தண்ணீரை தேடிக் கொண்டிருக்கிறான் சின்னத்தம்பி. யானைக்கு உடனடியாக தண்ணீர் கொடுத்து, அவனை மீண்டும் தடாகம் பகுதியிலேயே விடவேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.