ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு மௌனம் ஏன்? - சந்திரபாபு நாயுடு | Chandrababu naidu started stir for special status for Andhra pradesh

வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (12/02/2019)

கடைசி தொடர்பு:11:17 (12/02/2019)

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு மௌனம் ஏன்? - சந்திரபாபு நாயுடு

தமிழகத்திற்குச் சென்னை, கர்நாடகாவுக்குப் பெங்களூரு என இருப்பது போல ஆந்திராவுக்கென இருந்த ஹைதராபாத் தெலங்கான வசம் சென்றுவிட ஆந்திரா பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. ஆந்திர மாநிலப் பிரிவினையின்போது ஆந்திராவுக்கும் தெலங்கானாவுக்கும், உரிய நிதி வசதிகளைச் செய்து கொடுங்கள் என அப்போது மத்தியில் ஆட்சி புரிந்த காங்கிரஸ் கட்சியிடம் இருதரப்பும் கேட்டுக் கொண்டார்கள் அதன் அடிப்படையிலேயே ஆந்திரா இரண்டு மாநிலங்களாகப் பிரிந்தது.

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு மௌனம் ஏன்? - சந்திரபாபு நாயுடு

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென வலியுறுத்தி, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டிருக்கிறார். சந்திரபாபு நாயுடுகேட்கும் சிறப்பு அந்தஸ்து என்பது என்ன,? ஏன் அவர் அதைக் கோருகிறார்...?

கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்தப் பிரிவினையின்போது ஆந்திராவின் மிக முக்கிய வர்த்தக நகரமான ஹைதராபாத், தெலங்கானா மாநிலத் தலைநகரானது. தமிழகத்திற்குச் சென்னை, கர்நாடகாவுக்குப் பெங்களூரு போன்று ஏற்கெனவே தலைநகரமாகவும், ஐ.டி உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சியடைந்த நகரமாகவும் திகழும் ஹைதராபாத் தெலங்கானா வசம் சென்றதால், ஆந்திராவுக்குப் புதிய தலைநகரை நிர்மாணிக்கும் மிகப்பெரும் நிதிச்சுமையுடன் கூடிய நெருக்கடி ஏற்பட்டது. மாநிலப் பிரிவினையின்போது `ஆந்திராவுக்கும், தெலங்கானாவுக்கும்,  உரிய நிதியுதவியைச் செய்து கொடுங்கள்' என அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசிடம் இரு மாநிலங்களும் கேட்டுக் கொண்டன. அதன் அடிப்படையிலேயே ஆந்திரா பிரிவினைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டது..

ஆந்திரா தெலுங்கான பிரிவினை

பல முக்கிய அரசு அலுவலகங்கள், ஐ.டி. நிறுவனங்கள் எனத் தலைநகரத்திற்கு உரிய கட்டமைப்புடன் இருந்த ஹைதராபாத், போன்று புதிய தலைநகரை உருவாக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார்.  `ஆந்திராவுக்கு எல்லா வகையிலும் உதவுவோம்' என 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்ததன் பேரிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார் சந்திரபாபு நாயுடு. ஆனால், அவர்கள் உரிய அளவு நிதியை தேர்தல் முடிந்து மத்தியில் ஆட்சியமைத்த பின்னர் விடுவிக்கவில்லை. மாநிலத்தில் புதிய திட்டங்களை அமல்படுத்த, போலாவரம் பகுதியில் புதிய அணை கட்ட, அமராவதி நகர் அமைக்க எனப் பல விஷயங்களுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டார் சந்திரபாபு. ஆனால்,  எதற்குமே செவிசாய்க்காததால், மத்திய பி.ஜே.பி. அரசின் மீது கடும் அதிருப்தியில் இருந்த சந்திரபாபு மாநிலங்களுக்கு வழங்குகிற சிறப்பு அந்தஸ்து பிரிவின் கீழ், ஆந்திராவுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அதற்கும் மத்திய அரசிடமிருந்து சரியான பதிலில்லை. ஆகவே ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார். ஏற்கெனவே தன் பிறந்த நாள் அன்றும் இதே நோக்கத்திற்காக உண்ணாவிரதம் இருந்தார்.

சந்திரபாபு நாயுடு  உண்ணாவிரதம்

மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்பட்சத்தில், அந்த மாநிலத்துக்கு மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியுதவியும், வரிச்சலுகைகள் உட்பட பல்வேறு சலுகைகளும் கிடைக்கும். அந்த மாநிலத்தில் புதிய தொழிற்சாலைகள் உருவாகுவதற்கு மத்திய அரசு உதவும். இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, அசாம், நாகாலாந்து, ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றவை.

மாநிலங்களுக்கு ஒவ்வோர் நிதியாண்டும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறபோது, சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்ட மாநிலங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அந்த மாநிலங்களின் தேவைக்கு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கூடுதல் நிதி அளிக்கப்படும். மீதமிருக்கும் நிதியே இதர மாநிலங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். எந்த அடிப்படையில் ஒரு மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் என்பது, அந்த மாநிலத்தில் நிலவும் அப்போதைய அரசியல் சூழல், பொருளாதார நிலை, மாநில மேம்பாட்டிற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது எனப் பல்வேறு காரணிகள் அளவுகோல்களாக வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானாவுக்குத் தலைநகர் ஹைதராபாத் சென்று விட்டதால், புதிய தலைநகரை ஏற்படுத்தி, உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு அதிக நிதி தேவை என்ற அடிப்படையிலேயே சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரி போராடுகிறார். அத்தகைய சிறப்பு அந்தஸ்து தொடர்பான இறுதி முடிவை மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய மேம்பாட்டுக் கழகம் முடிவு செய்யும். என்றாலும், பிரதமர்தான் இறுதி முடிவு எடுப்பார். ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரை, பல முறை கோரிக்கை வைத்த நிலையிலும், நாடாளுமன்றத்தில் தெலுங்குதேசம் எம்.பி-க்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட போதிலும் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்துக்கான அறிவிப்பை வெளியிடவில்லை. அதன் பின்னரே, மத்திய அரசை விமர்சிக்கத் தொடங்கினார். `பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த நிலையிலும் சொந்த மாநிலமான ஆந்திராவுக்கு உரிய நிதியைப் பெற்றுத் தரமுடியவில்லை' என்பதாலேயே, அம்மாநில மக்களின் நலன் கருதி மத்திய அரசை விமர்சித்து போராட்டத்தில் குதித்துள்ளார் சந்திரபாபு நாயுடு. 

ஆனால், தமிழகத்திலோ நிலைமை தலைகீழாக உள்ளது. பி.ஜே.பி. கூட்டணியில் இடம்பெறாமலேயே மத்திய அரசுக்குப் பல்வேறு வகையிலும் ஆதரவாகச் செயல்படுகிறது இப்போதைய தமிழக அரசு. `நீட் தேர்வு', `ஹைட்ரோ கார்பன்', `ஸ்டெர்லைட்', `உதய் மின் திட்டம்' எனத் தமிழக மக்களின் உரிமைகளுக்காக எந்தவொரு குரலும் கொடுக்காத, மத்திய அரசை விமர்சிக்காத, அந்த அரசுக்கு சாமரம் வீசும் முதல்வர் தமிழ்நாட்டிற்குக் கிடைத்திருக்கிறார். அனைத்தையும் மக்கள் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு விரைவில் அவர்கள் உரிய பதிலைக் கொடுப்பார்கள்....


டிரெண்டிங் @ விகடன்