`தினசரி கதாநாயகனாக வலம்வருகிறான் சின்னத்தம்பி!'- சட்டப்பேரவையில் அமைச்சர் கலகலப்பு | minister dindigul seenivaasan talks about chinnathambi

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (12/02/2019)

கடைசி தொடர்பு:12:10 (12/02/2019)

`தினசரி கதாநாயகனாக வலம்வருகிறான் சின்னத்தம்பி!'- சட்டப்பேரவையில் அமைச்சர் கலகலப்பு

`தினசரி கதாநாயகன் சின்னத்தம்பி யானை'' என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டசபையில் பேசியுள்ளார். 

கோவையில் சின்னத்தம்பி என்றழைக்கப்படும் காட்டு யானையால், பயிர் சேதம் ஏற்படுவதாகக் கூறி, அதை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை அடுத்து சின்னத்தம்பி டாப்ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மயக்க ஊசி போட்டு இடமாற்றம் செய்யப்பட்டதில், சின்னத்தம்பி யானைக்கு உடலில் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டன. மேலும், தந்தமும் உடைந்தது. 

இதற்கிடையே, இடமாற்றம் செய்த சில நாள்களிலேயே, சின்னத்தம்பி தன் வாழ்விடத்தைத் தேடி வெளியில் வந்துவிட்டது. தொடர்ந்து தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி, கோவை, திருப்பூர் வனப்பகுதிகளில் சின்னத்தம்பி அலைந்து வருகிறது. சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சின்னத்தம்பி யானையைக் கும்கியாக மாற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அப்போது, `சின்னத்தம்பியை கும்கியாக மாற்றும் எண்ணம் இல்லை' என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. 

இதற்கிடையே இன்று சட்டப்பேரவையில் சின்னத்தம்பி யானையின் தற்போதைய நிலை என்ன என்று காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி, வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திகேயன் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``எந்த மிருகத்தையும் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை. தினசரி கதாநாயகனாக வலம் வருகிறான் சின்னத்தம்பி. சின்னத்தம்பியை யாரும் துன்புறுத்தவில்லை. சின்னத்தம்பி யானையை வனத்துக்குள் விடுவது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. தீர்ப்பு வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மிருகங்களிடமிருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து மிருகங்களையும் பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க