``சின்னத்தம்பியை ஏன் வனப்பகுதிக்குள் விடக்கூடாது?"- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி | Chennai High Court question to Tamilnadu Government on Chinnathambi issue

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (12/02/2019)

கடைசி தொடர்பு:12:50 (12/02/2019)

``சின்னத்தம்பியை ஏன் வனப்பகுதிக்குள் விடக்கூடாது?"- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

``சின்னத்தம்பி யானைக்கு இயற்கை உணவைக் கொடுத்து, அதை மீண்டும் ஏன் காட்டுக்கு அனுப்பக் கூடாது?'' என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சின்னத்தம்பி

கோவையிலிருந்து டாப்ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பி யானை, தனது வாழ்விடத்தைத் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்துள்ளது. அதை மீண்டும் வனத்துக்குள் விரட்ட வனத்துறை பல்வேறு முயற்சிகளைச் செய்தாலும், தன் வாழ்விடத்துக்காக சின்னத்தம்பி தொடர்ந்து போராடி வருகிறது. இதனிடையே, சின்னத்தம்பி வனப்பகுதிக்குள் செல்ல மறுப்பதால், அதைக் கும்கியாக மாற்றுவதற்கு வனத்துறை முயற்சி செய்தது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சின்னத்தம்பியை கும்கியாக மாற்றக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் சின்னத்தம்பியை கும்கியாக மாற்ற மாட்டோம் என்று கூறிய தமிழக அரசு தரப்பினர், ``நேற்று சின்னத்தம்பியை வனப்பகுதியில் விடுவதில் சிக்கல் உள்ளது. எனவே, அதை முகாமில் வைப்பதைத் தவிர வழியில்லை'' என்று கூறினர்.

சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருவதாக இருந்தது. ஆனால், இந்த வழக்கில் நாளை யானைகள் நிபுணர் அஜய் தேசாய் நேரில் ஆஜராக இருப்பதால் தமிழக அரசு தரப்பில் ஒருநாள் அவகாசம் கேட்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ``சின்னத்தம்பி யானையை ஏன் முகாமுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அந்த யானை விளை நிலங்களில் சாப்பிட்டுப் பழகியதாகக் கூறுகின்றீர்கள். ஏன், அதற்கு மீண்டும் இயற்கை உணவுகளைக் கொடுத்து பழக்கப்படுத்தி வனத்துக்குள் விடக் கூடாது. சின்னத்தம்பியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.