`செடிகளை ஒட்டு முறையில் வளர்ப்பது எப்படி?'- தோட்டக்கலை பண்ணைக்குச் சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள் | Government school students who went to the horticultural farm in karur

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (12/02/2019)

கடைசி தொடர்பு:13:30 (12/02/2019)

`செடிகளை ஒட்டு முறையில் வளர்ப்பது எப்படி?'- தோட்டக்கலை பண்ணைக்குச் சென்ற அரசுப்பள்ளி மாணவர்கள்

பொய்யாமணி நடுநிலைப்பள்ளி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள முதலைப்பட்டி தோட்டக்கலைப் பண்ணைக்கு பொய்யாமணி அரசுப் பள்ளி மாணவர்கள் விசிட் அடித்து, மரம், செடி, கொடி வளர்ப்பது பற்றி தெரிந்துகொண்டனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் இருக்கிறது பொய்யாமணி. இந்தக் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பூபதிபள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பூபதி. இவர் பள்ளிக்கு 13 லட்சம் வரை ஸ்பான்ஸர்கள் பிடித்து, பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி இருக்கிறார். அதோடு, மாணவர்களை மாதம் ஒரு இடத்துக்கு அழைத்துப் போய், நேரடி கள ஆய்வு மூலம் பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வழி வகுக்கிறார். அந்த வகையில்தான், தனது பள்ளி மாணவர்கள் 35 பேரை முதலைப்பட்டி அரசு தோட்டக்கலைப் பண்ணைக்கு அழைத்துப் போனார்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய பட்டதாரி ஆசிரியர் பூபதி, ``இது மிகப்பெரிய அனுபவத்தை மாணவர்களுக்கு கொடுத்தது. 'செடிகளை ஒட்டு முறையில் எப்படி வளர்ப்பது, அதை எவ்வாறு உருவாக்குவது' என்பது பற்றி செயல்விளக்கம் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. தோகமலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்ச்செல்வி, தோகமலை தோட்டக்கலை அலுவலர் மோ.பிரேமா எங்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். பண்ணையின் தோட்டக்கலை அலுவலர் கோபி, மாணவர்கள் அனைவருக்கும் அனைத்து இடங்களையும் சுற்றிக் காண்பித்து இந்தப் பணியின் மூலம் அரசு திட்டங்கள் எப்படியெல்லாம் மக்களுக்குப் பயன்படுகிறது என்பது பற்றியும், நாம் எப்படியெல்லாம் இதுபோன்ற பயிற்சிகளைப் பெற்று, ஒரு புதிய தொழில் முனைவோராக நம்மை மாற்றிக்கொள்ளலாம் என்றும் அருமையாக எடுத்துரைத்தார்.

முதலைப்பட்டி தோட்டக்கலை பண்ணையில் மாணவர்கள்

குறிப்பாக, கொய்யா மற்றும் நெல்லிக்கனியில் எப்படி போட்டு தாவரங்களை உருவாக்குவது என்பது பற்றி செயல்விளக்கம் அளித்தது மிகவும் சிறப்பாக இருந்தது. குழித்தட்டுகளின் மூலம் விதைகள் எப்படி வளர்க்கப்படுகின்றன என்பது பற்றியும் பாலிசி முறையில் செடிகள் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பது பற்றியும் எடுத்துக் கூறியது மாணவர்களுக்கு மிகுந்த ஆர்வத்தைத் தூண்டியது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக களப்பயணம் மேற்கொண்ட 35 மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர் தோட்டக்கலை அலுவலர்கள். எங்களோடு சேர்ந்து, `இந்த மரங்களை வளர்ப்போம்' என்று உறுதிமொழி அளித்து மாணவர்கள் விடைபெற்றனர்" என்றார்.