`கிளீன் போல்டு; நோ-பால்; சிக்ஸர்' - சட்டசபையில் மோதிய பொன்முடி, ஜெயக்குமார், தங்கமணி! | fight between dmk and admk in tn assembly

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (12/02/2019)

கடைசி தொடர்பு:13:55 (12/02/2019)

`கிளீன் போல்டு; நோ-பால்; சிக்ஸர்' - சட்டசபையில் மோதிய பொன்முடி, ஜெயக்குமார், தங்கமணி!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பட்ஜெட் குறித்த விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க - தி.மு.க இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இரு கட்சி உறுப்பினர்களும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். இன்றைய கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து தி.மு.க உறுப்பினர் பொன்முடி கேள்வி எழுப்பினார். 

பொன்முடி

அப்போது, ``60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளீர்கள். வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் ஓ.பி.எஸ் பட்ஜெட் வாசிக்கும்போது ஏன் இந்தத் திட்டத்தை அறிவிக்கவில்லை. நிதி அமைச்சர் அறிவிக்காமல் 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்தது ஏன்? நிதியமைச்சர் அறிவித்தது நிழல் பட்ஜெட். 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்ததே நிஜ பட்ஜெட்" எனக் கடுமையாக விமர்சித்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய ஓ.பி.எஸ், ``110 விதியின் கீழ் அறிவிக்க முதல்வருக்கு உரிமை உண்டு. வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது ஒன்றும் நிழல் பட்ஜெட் அல்ல. தி.மு.க தாக்கல் செய்தது தான் நிழல் பட்ஜெட். அதனால்தான் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது" என்றார். 

அவரைத் தொடர்ந்து பேசிய முதல்வர் பழனிசாமி, ``நாங்கள் தாக்கல் செய்தது நிஜ பட்ஜெட். தேர்தலுக்காக மக்களுக்கு ரூ.2,000 அளிக்கும் திட்டம் கொண்டுவரப்படவில்லை. கஜா புயல் ஏற்பட்டு விவசாயிகள் வறுமையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு  உதவும் விதமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது" என்றார்.

ஜெயக்குமார் 

முன்னதாக நேற்று பேசிய அ.தி.மு.க எம்.எல்.ஏ செம்மலை, ``பொங்கலுக்கு 1,000 ரூபாய் அளித்து முதல்வர் முதல் சிக்ஸர் அடித்தார். தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிக்ஸர் அடித்துக்கொண்டிருக்கிறார்" என்று பேசினார். 

இதைக் குறிப்பிட்டுப் பேசிய பொன்முடி, ``ஸ்டாலின் வீசும் பந்தில் அ.தி.மு.க ஆட்சி கிளீன் போல்டு ஆகும்" எனப் பேசினார்.'

தங்கமணி

இவருக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``ஸ்டாலின் வீசும் பந்து நோ-பால் ஆகிவிடும்" என்றார். அமைச்சர் தங்கமணியோ, ``மைதானத்துக்கு உள்ளேயே வராமல் ஸ்டாலின் பந்து வீசிக்கொண்டிருக்கிறார். மைதானத்துக்குள் வந்து வீசப்படும் பந்துதான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்" என்று பேசினார். இப்படியாகச் சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடந்து வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க