அதிகாலையில் போர்வையுடன் மூடிச் சென்ற நபர்களை அழைத்த எஸ்.ஐ-க்கு நடந்த சோகம்! | mob attacked Police SI neat Usilampatti

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (12/02/2019)

கடைசி தொடர்பு:15:35 (12/02/2019)

அதிகாலையில் போர்வையுடன் மூடிச் சென்ற நபர்களை அழைத்த எஸ்.ஐ-க்கு நடந்த சோகம்!

மதுரையில் அதிகாலையில் ரோந்துக்குச் சென்ற எஸ்.ஐ.யை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஐ. மாயன்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் அதிக அளவு கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் சட்டத்துக்குப் புறம்பாக கடத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றனர். இதனால் எஸ்.பி தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிரமாக காவல்துறையினர் இரவுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், உசிலம்பட்டி  உட்பட்ட சேடப்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.ஐ. மாயன் அதிகாலை 2 மணிக்கு சின்னக்கட்டளை பகுதியில் சோதனையில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவருடன் காவலர் ஆனந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது சாலை ஓரமாக இரண்டு மர்ம நபர்கள் கம்பளிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு உலாவிக்கொண்டிருந்தனர். வழிப்பறியில் ஈடுபடும் நபர்களாக இருக்கலாம் என அவர்களை விசாரிக்க எஸ்.ஐ மாயன் அழைத்துள்ளார். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு அந்த நபர்களும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

உடனிருந்த காவலர் ஆனந்தனும் அவர்களை மடக்கிப்பிடிக்க முடியாத நிலையில், காயமடைந்த எஸ்.ஐ. மாயனுக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ரோந்துப் பணியின்போது போலீஸ் எஸ்.ஐ-யை கத்தியால் குத்திய சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.