தப்ப முயன்ற ஏ.டி.எம் கொள்ளையன்... நடுரோட்டில் நடந்த களேபரம்... ஊர்க்காவலரின் அசாத்திய துணிச்சல் | Perambalur People catches man tries to rob ATM Machine

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (12/02/2019)

கடைசி தொடர்பு:15:50 (12/02/2019)

தப்ப முயன்ற ஏ.டி.எம் கொள்ளையன்... நடுரோட்டில் நடந்த களேபரம்... ஊர்க்காவலரின் அசாத்திய துணிச்சல்

பெரம்பலூரில் ஏ.டி.எம்-மை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவரை ஊர்க்காவல் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் தடுக்க முயன்றார். அவரின் மண்டையை உடைத்துவிட்டுத் தப்பிக்க முயன்ற கொள்ளையனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

                                                       உடைக்கபட்ட ஏடிஎம்

 

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஐ.டி.பி.ஐ வங்கியின் கிளை உள்ளது. அந்த வங்கிக்குச் சொந்தமாக ஏ.டி.எம் முகப்பில் வைக்கப்பட்டுள்ள மர்ம நபர் ஒருவர் விளக்குகளை அணைத்துவிட்டு ஏ.டி.எம்-யை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

                                                ஏடிஎம்மில் திருடும் கொள்ளையன்

விரைந்து சென்ற காவல்துறையினர், அவரைப் பிடிக்க முயன்றபோது கொள்ளையனுக்கும் காவலர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. உடனடியாகக் கொள்ளையன் தப்பிச்செல்ல முயன்றபோது காவலர்கள் அவரைத் தடுத்து பிடிக்க முயன்றனர். அப்போது, தன் கையில் வைத்திருந்த கட்டையால் காவலர்களைப் பலமாகத் தாக்கியுள்ளார். அதில், பெரம்பலூர் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கண்ணன் என்பவர் மண்டை உடைந்து படுகாயத்துடன் மயக்கமடைந்தார்.

                                                    ஊர்க்காவல் படை வீரர்
தனியாளாகக் கண்ணன் சென்றதால் அவரைத் தாக்கிவிட்டு தப்பி முயன்றபோது நடுசாலையில் கைகலப்பு ஏற்பட்டது. மண்டை உடைந்த நிலையில் கொள்ளையனுடன் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கண்ணன் துணிச்சலாகப் போராடிக்கொண்டிருந்தார். அங்கு வந்த போலீஸார், தப்ப முயன்ற கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர். 

                                                           கொள்ளையன்

விசாரணையில், நாமக்கல் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த துரைசாமி மகன் தனுஷ் என்று தெரியவந்தது. இவர், பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். வங்கி அதிகாரிகள் புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையன் மற்றும் காயமடைந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த கண்ணன் இருவருக்கும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.