டிஜிட்டலில் 2.25 லட்சம் வில்லங்கச் சான்றுகள்... பத்திரப்பதிவுத்துறை சாதனை..! | Tamilnadu Registration online scheme Star 2 point 0 completed one year

வெளியிடப்பட்ட நேரம்: 18:48 (12/02/2019)

கடைசி தொடர்பு:18:50 (12/02/2019)

டிஜிட்டலில் 2.25 லட்சம் வில்லங்கச் சான்றுகள்... பத்திரப்பதிவுத்துறை சாதனை..!

"சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில், அதிக பத்திரப்பதிவுகளை மேற்கொள்ளும் அதிகாரிகளைப் பாராட்டி, அவர்களுடைய படங்கள் பத்திரப்பதிவுத் துறை இணையதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளினால் பத்திரப்பதிவுத்துறை மிகச் சிறப்பான வளர்ச்சிகளை அடைந்து வருகிறது!"

டிஜிட்டலில் 2.25 லட்சம் வில்லங்கச் சான்றுகள்... பத்திரப்பதிவுத்துறை சாதனை..!

த்திரப்பதிவுத் துறையில் இணையதளம் மூலமாகச் சேவைகளை வழங்கும் `ஸ்டார் 2.0’-என்ற நடைமுறை, 2018 பிப்ரவரி 12-ம் தேதி கொண்டுவரப்பட்டது. இந்த முறையில் பத்திரப்பதிவு தொடங்கி, ஓராண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் 25 லட்சத்திற்கும் அதிகமான பத்திரங்கள் `ஸ்டார் 2.0’ மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதன்மூலம் தமிழக அரசின் பதிவுத்துறைக்கு 10,543 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி முதல் பத்திரப்பதிவுத் துறை அலுவலகங்களில் 5,000 ரூபாய்வரை மட்டும்தான் வரைவோலையாகச் செலுத்த முடியும். அதற்கு மேல் செலுத்தப்படும் கட்டணத்தைக் கட்டாயம் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளனர்.

ஸ்டார் 2.0 மூலம் பத்திரப்பதிவு நடைமுறை

`ஸ்டார் 2.0’ கொண்டுவரப்பட்டு ஓராண்டு முடிவடைந்த  நிலையில் இதுகுறித்து பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்  மற்றும் பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகளிடம் பேசினோம், ``தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவுத் துறை ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மொத்தம் 575 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இத்தனை அலுவலகங்களையும் `ஸ்டார் 2.0’ மூலம் ஒருங்கிணைத்துள்ளோம். இந்தப் புதிய செயல் வடிவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்புவரை மற்ற அலுவலகங்களுக்கு இடையேயான தொடர்புகள் அலுவலர்கள் மூலம்தான் நடைபெற்று வந்தன. அப்போதெல்லாம் கன்னியாகுமரியில் நடக்கும் ஒரு பத்திரப்பதிவு பற்றிய தகவல்கள் ஐ.ஜி அலுவலகம் வந்தடைய மிகவும் கால தாமதமாகும். ஆனால், இப்போது பயன்பாட்டில் உள்ள `ஸ்டார் 2.0’ மூலம் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை தமிழகம் முழுவதும் எவ்வளவு பத்திரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவல்கள் மின்னஞ்சல் மூலமாக உடனுக்குடன் வந்தடைந்துவிடும்.

கடந்த ஆண்டு இந்த இணையதளப் பத்திரப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஒரே நேரத்தில் அதிகப்படியானோர் இதைப் பயன்படுத்தியதால் இணையதளம் சரிவர இயங்கவில்லை. பின்னர் சென்னை ஐ.ஐ.டி உதவியுடன் சில மாற்றங்களைக் கொண்டுவந்து பிரச்னை சரி செய்யப்பட்டது. இப்போது தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்குக் குறைந்தது 10 ஆயிரத்திற்கு அதிகமாகவும், சில விசேஷ நாள்களில் 18,000 வரையிலும் பத்திரங்கள் எந்த இடையூறுகளும் இன்றி பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

அதிகாரிகள் லஞ்சம் பெறுவதைத் தவிர்ப்பதற்காகத்தான், பதிவுத் துறைக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஜனவரி 28 முதல் இணையதளம் மூலமாகச் செலுத்தும் முறையைக் கொண்டு வந்துள்ளோம். 5000 ரூபாய்க்கு அதிகமாகச் செலுத்தும் எந்தத் தொகையும் இணையதளம் மூலமாகத்தான் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 40க்கும் மேலான வங்கி அட்டைகளின் மூலமாகப் பணம் செலுத்துவதற்கான வழிவகை செய்துதரப்பட்டுள்ளது.

சார் பதிவு அலுவலகம்

ஆவணங்களின் ஆயுட்காலங்களை அதிகரிக்கும் விதமாக இணையத்தில் ஆவணங்களை உருவாக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யார் வேண்டுமானாலும் தாங்களாகவே பதிவுத் துறை இணையதளத்தின் மூலமாக தங்களுக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்க முடியும். அதேபோல் பத்திரங்களைப் பதிவுசெய்ய பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ளதுபோல தாங்கள் விரும்பிய நேரத்தை முன்கூட்டியே புக் செய்துகொண்டு, மூன்று மாத காலத்திற்குள் பத்திரப்பதிவை மேற்கொள்ள முடியும். பழைய ஆவணங்களையும் டிஜிட்டலுக்கு மாற்றிப் பாதுகாப்பதற்கான செயல்களும் நடந்துகொண்டிருக்கின்றன. அதேபோல் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை உரியவர்களிடம் அளிப்பதில் நீடித்து வந்த தாமதத்தைப் போக்க, நாள் ஒன்றுக்கு 20 பத்திரங்களுக்குக் குறைவாகப் பதிவு செய்யப்பட்ட சார் பதிவு அலுவலகங்களில் இரண்டு நாள்களுக்குள் ஆவணங்கள் வழங்கப்படும். 20-க்கும் அதிகமாகப் பத்திரப்பதிவு செய்யப்படும் அலுவலகங்களில் மூன்று நாள்களுக்குள் ஆவணங்கள் திரும்ப அளிக்கப்படும் என்ற புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

அதிகப்படியான மக்கள் வில்லங்கச்சான்று பெறுவதற்காகப் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வருகின்றனர். அவற்றைப் பெறுவதிலும் முறைகேடுகள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு, தற்போது இணையம் மூலமாக வில்லங்கச் சான்று பெறும் முறை, கடந்த டிசம்பர் 10-ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. மிகக்குறுகிய காலத்தில் இணையம் மூலம் 2,25,000 க்கும் அதிகமான வில்லங்கச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில், அதிக பத்திரப்பதிவுகளை மேற்கொள்ளும் அதிகாரிகளைப் பாராட்டி, அவர்களுடைய படங்கள் பத்திரப்பதிவுத் துறை இணையதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளினால் பத்திரப்பதிவுத்துறை மிகச் சிறப்பான வளர்ச்சிகளை அடைந்து வருகிறது” என்று தெரிவித்தனர்.


டிரெண்டிங் @ விகடன்