`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை?’ - உயர் நீதிமன்றம் கேள்வி | Adichanallur excavations report should be submitted ordered Madurai HC bench

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (12/02/2019)

கடைசி தொடர்பு:19:20 (12/02/2019)

`ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை?’ - உயர் நீதிமன்றம் கேள்வி

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆதிச்சநல்லூர்

காமராஜ்கீழடியைப் போலவே ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியும் மறைக்கப்படுவதாகத் தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ``தூத்துக்குடி மாவட்டம் சிவகளை பரம்புப் பகுதியில் தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதே பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்தால் இன்னும் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும். எனவே, இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு விசாரணையின்போது, ``ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை? தமிழர் நாகரிகம், பண்பாட்டை அறிவது முக்கியம். ஆனால், மத்திய அரசு இது போன்ற விஷயங்களில் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல. கீழடி அகழ்வாய்விலும் அதிகாரி இடம் மாற்றம் எனப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதுபோன்ற நிகழ்வுகளால்தான் மத்திய தொல்லியல்துறை மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதைத் தவிர்க்க வேண்டும். விரைவாகக் குறிப்பிட்ட காலத்துக்குள் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும். மேலும், சிவகளை பரம்புப் பகுதியில் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய, மாநிலத் தொல்லியல் துறை இயக்குநர்கள் பதிலளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தொடர்புடைய தொல்லியல்துறை அதிகாரிகளுக்கு நேரில் ஆஜராக நேரிடும்’’ என்று விசாரணை முடிவில் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.