`தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து அது; அ.தி.மு.க தலைமை அப்படிச் சொல்லவில்லை!’ - முரளிதர ராவ் | Muralidhara rao speaks about ADMK alliance

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (12/02/2019)

கடைசி தொடர்பு:19:50 (12/02/2019)

`தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து அது; அ.தி.மு.க தலைமை அப்படிச் சொல்லவில்லை!’ - முரளிதர ராவ்

`நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அ.தி.மு.க தலைமையிலிருந்து அதுபோன்ற கருத்துகள் வரவில்லை. தலைமையின் கருத்துகளைத்தான் நாங்கள் கவனிக்கிறோம்’’ என்று  பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் கோவையில் தெரிவித்துள்ளார்.

முரளிதர் ராவ்

கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஜவுளித்துறையினருடன் கலந்துரையாடல் கோவையில் நடைபெற்றது. இதில்  பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ், மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். 

ஜவுளித்துறையினர் தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்த பின்னர் பேசிய முரளிதர ராவ், ``2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக பா.ஜ.க தயாரிக்க இருக்கும் குறும்படத்துக்காக 'பாரத் மன் கீ பாத் மோடி கே சாத்' நிகழ்ச்சி மூலம் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம். 10 கோடி மக்களிடம் தகவல்களைப் பெற திட்டமிட்டுள்ளோம். பா.ஜ.க தலைவர்கள் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இல்லை. பிரதமர் மோடி மாநில அரசுக்கு அறிவுரை வழங்கினால், அதற்கு மாநில அரசு துணை நிற்க மாட்டார்கள். எனவே,  மோடிக்கு தனி வலிமையை வழங்க வேண்டும்’’ என்றார்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், ``விவசாயத்துக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு வழங்கும் ஜவுளித்துறையில் இந்தியாவிலேயே கோவை, திருப்பூர், கரூர் ஆகிய பகுதிகள் முக்கியமானவை. மக்களுடன் பிரதமர் மோடிக்கு தொடர்பு அதிகரித்திருப்பதால் தமிழகத்தில் மக்களிடையே பா.ஜ.க-வுக்கான ஆதரவு பெருகியுள்ளது. கூட்டணி குறித்து நட்பான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வளர்ச்சி மற்றும் நேர்மறையான அரசியல் வழங்கும் வகையில் பா.ஜ.க தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படும்.

கூட்டணியைப் பொறுத்தவரை எந்தக் கட்சியிடனும் பிரச்னை இல்லாமல் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் கூட்டணி அறிவிக்கப்படும். நாடாளுமன்றத்தில் தம்பிதுரை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அ.தி.மு.க தலைமையிலிருந்து அதுபோன்ற கருத்துகள் வரவில்லை. தலைமயின் கருத்துகளைத்தான் நாங்கள் கவனிக்கிறோம்’’ என்றார். தம்பிதுரையின் பேச்சால் அ.தி.மு.க - பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைப்பதில் பிரச்சனை ஏற்படுமா என்ற கேள்விக்கு, `அது அ.தி.மு.க-வின் பிரச்னை’ எனப் பதிலளித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க