`பகலில் கொள்ளை; இரவில் கொண்டாட்டம்!’ - கரூர் அருகே திருட முயன்ற சகோதரர்களை மடக்கிப் பிடித்த மக்கள் | People catch brothers, who tries to loot house near Karur

வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (12/02/2019)

கடைசி தொடர்பு:20:35 (12/02/2019)

`பகலில் கொள்ளை; இரவில் கொண்டாட்டம்!’ - கரூர் அருகே திருட முயன்ற சகோதரர்களை மடக்கிப் பிடித்த மக்கள்

கரூரில் பட்டப்பகலில் வீட்டுக்கதவை உடைத்து திருட முயன்ற சகோதரர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை கையும் களவுமாகப் பிடித்த அப்பகுதி மக்கள், அவர்கள் இருவரையும் போலீஸிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பையில் ஏற்கெனவே திருடிய ஏராளமான நகைகள் இருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

தான்தோன்றிமலை காவல்நிலையம்

கரூர் கருப்பண்ணகவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவர் தன் குடும்பத்தினரோடு வெளியூர் சென்றுவிட்டார். இந்நிலையில், இன்று மதியம் அவரது வீட்டில் முன்பக்க கதவை பட்டப்பகலில் 2 இளைஞர்கள் உடைத்துக்கொண்டிருப்பதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து திடுக்கிட்டனர். தொடர்ந்து, அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் சொல்லியுள்ளனர்.

பழனிகுமார் வீடு

வீட்டின் உரிமையாளர் இல்லாமல் அவரது வீட்டின் கதவை உடைத்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அந்த இரண்டு பேரையும் பிடித்து அடித்து, உதைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் கொள்ளையடிக்க வந்ததும், ஏற்கெனவே ஆசிரியர் காலனியில் மாரியப்பன் என்பவர் வீட்டில் நகைகளைத் திருடி தங்கள் கையில் வைத்திருப்பதைக் கண்டும் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதுகுறித்து தான்தோன்றிமலை போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.

திருட்டு நடந்த மாரியப்பன் வீடு

மொய்தீன்விரைந்து வந்த தான்தோன்றிமலை போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது தெரிய வந்தது. தர்மபுரி மாவட்டம் வெண்ணபட்டியைச் சேர்ந்த மொய்தீன் (30), சாதிக்பாட்சா (27) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் ஏற்கெனவே சேலம் மாவட்டம் அழகாபுரம் காவல்நிலையத்தில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், கடந்த ஆறு மாதத்துக்கு முன்புதான் வெளியே வந்ததும் தெரியவந்தது. மேலும், தான்தோன்றிமலை போலீஸார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸார் அவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில்,இருவரும் பெரும்பாலும் பகலில் மட்டும் அதிகம் கொள்ளையடிப்பதும், அதைக் கொண்டு இரவில் கொண்டாட்டமாகச் செலவு செய்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்திருக்கிறது.

`பட்டப்பகலில் கரூர் நகரத்தை ஒட்டியுள்ள தான்தோன்றிமலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து திருடும் அளவுக்குத் திருடர்களுக்கு துணிவு வந்துவிட்டதா? போலீஸாரின் அலட்சியமான நடவடிக்கைகள்தான் இந்தத் துணிச்சலுக்குக் காரணம்' என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.