நெல்லை மாவட்ட கல்வித் துறையில் கோடிக்கணக்கில் ஊழல்? - ஆடியோவால் அதிகாரிகள் கலக்கம் | Corruption in Nellai education department? - audio goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 21:06 (12/02/2019)

கடைசி தொடர்பு:21:06 (12/02/2019)

நெல்லை மாவட்ட கல்வித் துறையில் கோடிக்கணக்கில் ஊழல்? - ஆடியோவால் அதிகாரிகள் கலக்கம்

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்று இருப்பதாக வெளியான ஆடியோவால் கல்வித்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்த ஆடியோ குறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்துவதால் கல்வித்துறையில் பணியாற்றும் பலரும் பதற்றமடைந்துள்ளனர். 

கல்வித்துறை ஊழல் குறித்து ஆட்சியரிடம் மனு

நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் பணிபுரியும் அழகுராஜன் என்பவர், ஆசிரியர் ஒருவருடன் பேசும் ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதில், கண்காணிப்பாளர் பொறுப்பில் இருந்த சந்திரசேகரன் என்பவர் இணை இயக்குநரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு காலிப் பணியிடங்களில் 12 ஆசிரியர்களை பணியமர்த்தி கோடிக்கணக்கில் ஊழல் செய்திருப்பதாகப் பேசுகிறார். இந்த ஆடியோ குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலரான பரசுராமன் என்பவர் நெல்லை மாவட்ட ஆட்சியரான ஷிலா பிரபாகர்சதீஷிடம் புகார் மனு அளித்துள்ளார். அதனுடன் புகாருக்கான ஆடியோவின் சி.டி-யையும் ஆதாரமாக அளித்திருக்கிறார். 

ஆடியோவில் பேசும் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரான அழகுராஜன் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. அவர் மீதான புகார்கள் தொடர்பாக இதுவரை விசாரணைகூட நடத்தப்படவில்லை எனப் புகார் தெரிவித்த பரசுராமன் கூறினார். இது குறித்து பரசுராமன் கூறுகையில், ``கடந்த 5 வருடங்களாக அழகுராஜன் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். 

கலந்தாய்வு மூலம் நடைபெறும் ஆசிரியர் பணியிட மாற்றத்துக்குக்கூட பணம் பெறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனாலும், கல்வித்துறையின் மேல்மட்டத்தில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அதனால்தான் அவர் மீது பல்வேறு முறைகேடுகள் தொடர்பாகப் புகார்கள் எழுந்தபோதிலும், அவரை பணியிட மாற்றம்கூட செய்ய முடிவில்லை முதன்மைக் கல்வி அலுவலகத்தைப் பொறுத்தவரை அழகுராஜனை மீறி எதுவும் நடைபெறாது என்ற நிலையே தற்போது உள்ளது 

கல்வித்துறை தலைமை அலுவலகம்

இதுவரையிலும் எந்த அதிகாரி வந்தாலும் அவர் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிந்ததில்லை. அந்த அளவுக்கு செல்வாக்கு மிகுந்தவராக இருக்கிறார். அதனால் அழகுராஜன் மீதும் நெல்லை மாவட்ட கல்வித்துறையில் நடந்திருக்கும் ஊழல்கள் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தி மனு அளித்திருக்கிறேன். முதல்வரின் தனிப்பிரிவுக்கும் இந்த விவகாரம் குறித்து புகார் மனு அனுப்பியிருக்கிறேன்’’ என்றார். 

இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் பாலாவிடம் கேட்டபோது, ``முதல்வரின் தனி பிரிவிலிருந்து ஆடியோ சிடி தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில் நேர்முக உதவியாளர் அழகுராஜனிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் விரைவில் அரசுக்கு அறிக்கை அளிப்போம்’’ என்று முடித்துக் கொண்டார். கல்வித்துறையின் களங்கத்தைப் போக்க வேண்டியது அரசின் கடமை.