வேலூரில் ரூ.300 கோடி நிலம் அபகரிப்பு? - அமைச்சர் வீரமணிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Madras HC order over alleged land issue problem against Minister KC Veeramani

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (12/02/2019)

கடைசி தொடர்பு:22:40 (12/02/2019)

வேலூரில் ரூ.300 கோடி நிலம் அபகரிப்பு? - அமைச்சர் வீரமணிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வேலூரில், பிரச்னைக்குரிய ரூ.300 கோடி நில விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தொடர்பில்லையென்றால், அவர் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ரூ.300 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் 90 சென்ட் நிலத்தை அபகரித்ததாகக் கூறப்படும் புகாரின் பின்னணியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக அமைச்சர் வீரமணி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பரும் தொழிலதிபருமான சேகர்ரெட்டி உள்ளிட்டோர் மீது காட்பாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் வேலூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்திருந்தனர்.

வேலூரில் உள்ள ரூ.300 கோடி நிலம்

இவ்வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மேற்படி நில விவகாரத்தில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு இல்லை’’ என்று தெரிவித்தார். இருத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘இந்த நில விவகாரத்தில் அமைச்சர் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கும், இதில் அமைச்சருக்குத் தொடர்பில்லை என்பதற்குமான உறுதி மொழி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்குத் தள்ளிவைத்ததாக, மனுதாரர்களில் ஒருவரான ஜெயப்பிரகாஷ் தெரிவித்தார்.