``சட்ட விரோதமாகச் செயல்படும் டாஸ்மாக் பார்களை இழுத்து மூடுங்கள்!’’ - நீதிமன்றம் அதிரடி | Madras high court orders over illegal tasmac

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (12/02/2019)

கடைசி தொடர்பு:22:00 (12/02/2019)

``சட்ட விரோதமாகச் செயல்படும் டாஸ்மாக் பார்களை இழுத்து மூடுங்கள்!’’ - நீதிமன்றம் அதிரடி

உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாகச் செயல்படும் டாஸ்மாக் பார்களை இழுத்து மூட வேண்டும் என்று தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பானங்களுக்குப் பில் வழங்க வேண்டும். உரிமக் கட்டணம் மற்றும் சுகாதாரமில்லாமல் இயங்கும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், “கோவை மாவட்ட ஆட்சியரிடம் கடந்த நவம்பர் மாதம் மனு அளித்தேன். எனது மனு மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் நீதிமன்றம் தலையிட்டு தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மதுவை அதிக விலைக்கு விற்றதாகக் கடந்த ஆண்டு 3,500 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமம் இல்லாமல் செயல்பட்ட 2,505 சட்டவிரோத பார்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளுக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிரிவில் கைது செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது” என்று தெரிவித்தார். 

டாஸ்மாக்

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “வழக்குகள் பதிவு செய்வதால் மட்டும் சட்டவிரோத பார்களை தடுத்துவிட முடியாது. மீண்டும் மீண்டும் பார்கள் சட்ட விரோதமாகத்தான் செயல்படும். சட்டவிரோத பார்கள் என்று தெரிந்தால் எப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடியாகப் பார்களை மூட வேண்டும். மேலும், சட்டவிரோத பார்கள் மீது டாஸ்மாக் நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.