கல்குவாரிகளால் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு! - அதிகாரிகள் அலட்சியத்தால் இறைவனிடம் மனு | Nagercoil village peoples gives complaint copies to god over sand quarry issue

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (12/02/2019)

கடைசி தொடர்பு:23:00 (12/02/2019)

கல்குவாரிகளால் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு! - அதிகாரிகள் அலட்சியத்தால் இறைவனிடம் மனு

நாகர்கோவில்  அருகே மலைகளை வெடி வைத்துத் தகர்ப்பதால் 2 ஆயிரம் வீடுகளில் விரிசல் அடைந்துள்ளதாகவும். அதிகாரிகளிடம் புகார் செய்தும் குவாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கல்குவாரி

நாகர்கோவில்  அருகே தோட்டியோட்டில் மலை வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு கற்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அனுமதி பெற்று பாறைகளை உடைப்பது ஒருபுறம் என்றால், அனுமதி பெறாமலே சிலர் குவாரிகள் அமைத்துள்ளனர். அதிலும், கேரள மாநிலத்திற்கு அதிக விலைக்கு ஜல்லி, எம் சாண்ட் ஆகியவை விற்பதற்காக அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மலைகளை உடைத்து வருவதாகப் புகார் எழுந்திருக்கிறது. அதிலும் குடியிருப்புகளுக்கு அருகிலேயே கல்குவாரிகள் அமைத்து மலைகளை வெடிவைத்துத் தகர்க்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் தோட்டியோடு அருகே உள்ள இடமருவத்தூர், பரசேரி உட்பட 4 கிராமங்களில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விரிசல்

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனக் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து மக்கள் இறைவனிடம் முறையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அலட்சியத்தால் இறைவனிடம் மனு கொடுத்த பொதுமக்கள்  கூறுகையில், "தோட்டியோடு பகுதியில் 30க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டுவருகின்றன. முறையான அனுமதி பெறாமல் பல கல்குவாரிகளும், கிரசர் பொடி தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. மலைகள் வெடிவைத்து  உடைக்கும் போது அருகில் உள்ள பரசேரி, இடமருவத்தூர், கொன்னக்குழி விளை, கரிஞ்சான்கோடு ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இதனால் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

இறைவனிடம் முறையிடும் போராட்டம்

பயங்கர அதிர்வு ஏற்படுவதால் கர்ப்பிணி பெண்கள் சிலருக்கு கருச் சிதைவு ஏற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வள அதிகாரிகளிடம் புகார் செய்தும் அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. அதிகாரிகள் குவாரி உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களின் நலனை புறந்தள்ளுகின்றனர். குவாரி உரிமையாளர்கள் அதிகளவு வெடிபொருட்களை வெடித்து இரவு பகல் பாராமல் வெடித்து பாறையை தகர்கின்றனர். மேலும் 24 மணி நேரமும் கிரசரில் எம் சாண்ட் பொடிப்பதாலும், டெம்போக்களில் எடுத்துச்செல்வதாலும் தூரி மண்டலம் பரவி கிராமத்தில் உள்ள குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை சுவாசப் பிரச்னை உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது" என்றனர்.