பட்டாசு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி | central and state government action to open the fire factory: marxist communist

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (13/02/2019)

கடைசி தொடர்பு:10:31 (13/02/2019)

பட்டாசு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

பட்டாசு

பட்டாசுத் தொழிலாளர்கள், சிவகாசியில் இரண்டாம் நாளாகப் போராட்டம் நடத்திவரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் நீதிமன்றத்தில் உரிய முறையில் வாதாடி பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் தெரிவித்தார்.

பட்டாசு ஆலை

 

விருதுநகர் மாவட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்தத் தொழிலை நம்பி 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது. பசுமைப் பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி முதல் அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடிக்கிடக்கின்றன. இதனால், பட்டாசுத் தொழிலாளர்கள் அனைவரும் வேலைவாய்ப்பின்றித் தவித்துவருகின்றனர். எனவே, ஆலைகளைத் திறக்கக் கோரி பல்வேறு போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து நடத்திவருகின்றனர்.

பட்டாசு உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். பட்டாசுத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு சார்பில் சிவகாசி - திருத்தங்கல் சாலையில் நேற்று முதல் போராட்டம் தொடங்கியது. இரண்டாம் நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மார்க்சிஸ்ட்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருதுநகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.என்.எஸ்.வெங்கட்ராமன் கூறும்போது, உச்ச நீதிமன்ற உத்தரவால் பட்டாசுத் தொழிலாளர்கள் 8 லட்சம் பேர் வாழ்வை இழந்துள்ளனர். வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் 100 நாள்களாகப் போராட்டம் நடத்தியும்கூட மத்திய, மாநில அரசுகள்  செவிசாய்க்கவில்லை.

வெங்கட்ராமன்

எனவே, மத்திய மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, பட்டாசுத் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதுபோல பட்டாசுத் தொழில் இல்லாத காலத்தில் பட்டாசுத் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ரூ.2,000 என்பது அடிப்படைப் பிரச்னைகளுக்கு எந்த வகையிலும் உதவாது. நிரந்தர வேலை, நிரந்தர வருமானம் தேவை. வறட்சி மாநிலமாக அறிவித்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.