விருதுநகர் பஜார் வழியாகப் பேருந்துகள் இயக்கம் - தெப்பத்தை ரசித்தபடி செல்லும் பயணிகள் | bus operate via virudhunagar bazaar

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (13/02/2019)

கடைசி தொடர்பு:08:51 (13/02/2019)

விருதுநகர் பஜார் வழியாகப் பேருந்துகள் இயக்கம் - தெப்பத்தை ரசித்தபடி செல்லும் பயணிகள்

27 ஆண்டுகளுக்குப் பின் விருதுநகர் பஜார் வழியாகப் பேருந்துகள் இயக்கப்படுவதால், தெப்பத்தை ரசித்தபடியே பொதுமக்கள் மகிழ்ச்சியோடு பயணம் செய்துவருகின்றனர்.

பேருந்து

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சாத்தூர், அருப்புக்கோட்டை செல்லும் பேருந்துகள், பஜார் வழியாகவே இயக்கப்பட்டு வந்தன. பின்னர் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டதால், 1992-ம் ஆண்டுக்குப் பின் அந்த வழியாகப் பேருந்துகள் இயக்குவது நிறுத்தப்பட்டது. இதனால் 60 அடியாக இருந்த சாலை, ஆக்கிரமிப்பு காரணமாக பாதியாகச் சுருங்கிவிட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில் பேருந்துகள் இயக்க முடிவெடுக்கப்பட்டு, அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. ஆனால், பேருந்துகள் இயக்கப்படவில்லை. மாதம்தோறும் நடத்தப்படும் சாலை பாதுகாப்புக் குழு கூட்டத்தில் பழையபடியே இந்த வழியாகப் பேருந்து இயக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

அதன்படி, விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் தற்போது மாரியம்மன் கோயில், மெயின் பஜார், தெப்பம், நகராட்சி அலுவலகம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல ஆண்டுகளாக தெப்பம் இருப்பதே தெரியாமல் இருந்த பேருந்து பயணிகள் எல்லாம் தற்போது தண்ணீர் நிரம்பி அழகாக காட்சியளிக்கும் தெப்பத்தின் அழகை ரசித்தபடியே பயணித்து வருகின்றனர்.

விருதுநகர்

இந்த வழியாகப் பேருந்துகளை இயக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுமக்களோ ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பேருந்துகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.