காலியானது பாலகிருஷ்ண ரெட்டி அறை | government vacates former minister balakrishna reddy room in secretariat

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (13/02/2019)

கடைசி தொடர்பு:08:32 (13/02/2019)

 காலியானது பாலகிருஷ்ண ரெட்டி அறை

கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மூன்றாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் அறை இன்று காலிசெய்யப்பட்டது.

பாலகிருஷ்ண ரெட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கக் கோரி, 1998-ம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது. போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில், போலீஸ் ஜீப் ஒன்று கொளுத்தப்பட்டது. அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள்மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இக்கலவரம் தொடர்பாக 108 பேர்மீது அப்போது வழக்கு பதியப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியும் ஒருவர். 

2001-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்த பாலகிருஷ்ண ரெட்டி, ஓசூர் நகராட்சித் தலைவர், ஒன்றியச் செயலாளர், எம்.எல்.ஏ., அமைச்சர் என்று பல படிகள் உயர்ந்தார். அமைச்சர் மீதிருந்த கலவர வழக்கு, கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில், கடந்த ஜனவரி 7-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி சாந்தி, பாலகிருஷ்ண ரெட்டி மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். 

அவருக்கு, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 147-ன் கீழ்  ஓராண்டு சிறைத் தண்டனையும் ரூ.500 அபராதமும், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 341-ன் கீழ் ஒரு மாதம் சிறைத் தண்டனையும், தமிழ்நாடு பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். இந்தத் தண்டனையை பாலகிருஷ்ணரெட்டி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தீர்ப்பு வழங்கப்பட்ட அடுத்த நிமிடமே, பாலகிருஷ்ண ரெட்டி வகித்துவந்த எம்.எல்.ஏ பதவி ரத்தானது. தனது அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

பாலகிருஷ்ண ரெட்டி அறை

ஓசூர் சட்டமன்றத் தொகுதி காலியானதாக இந்நேரம் வரை தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் அறிவிக்காத நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடுசெய்துள்ளார். இந்நிலையில், தலைமைச் செயலகத்திலுள்ள பாலகிருஷ்ண ரெட்டியின் அமைச்சர் அறை இன்று காலிசெய்யப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல், தலைமைச் செயலக ஊழியர்கள் மூன்று பேர், முன்னாள் அமைச்சரின் அறையிலிருந்த கோப்புகள், சாமி படங்கள், காபி பிளாஸ்க் போன்றவற்றை அப்புறப்படுத்தினர். சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் பகல் நேரத்தில் அறையைக் காலிசெய்தால் தேவையற்ற சலசலப்புகள் உருவாகும் என்பதால், பாலகிருஷ்ண ரெட்டியின் அறை இரவில் காலி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.