அதிகரிக்கிறதா சென்னை மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை?! | Have the number of people using chennai metro increased

வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (13/02/2019)

கடைசி தொடர்பு:10:46 (13/02/2019)

அதிகரிக்கிறதா சென்னை மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை?!

அதிகரிக்கிறதா சென்னை மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை?!

சென்னை வண்ணாரப்பேட்டையிலிருந்து போக்குவரத்து நெரிசல் நிறைந்த அண்ணாசாலையின் எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு வழியாக டி.எம்.எஸ் வரையிலான மெட்ரோ ரயில் சேவை, பிப்ரவரி 10-ம் தேதி முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை மெட்ரோவின் முதல்கட்ட திட்டமானது, இரண்டு வழித்தடங்களைக் கொண்டது. முதலாவது வழித்தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை விமான நிலையம் வரையிலும், இரண்டாவது வழித்தடமானது சென்டரலிலிருந்து பரங்கிமலைவரை என 45 கி.மீ தொலைவிற்கு 32 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டத்தின் தொடர்ச்சியாக வண்ணாரப் பேட்டையிலிருந்து திருவெற்றியூர் வரையிலான மெட்ரோ வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட மற்ற நகரங்களில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்களின் கட்டணங்களைக் காட்டிலும் இங்கு கட்டணம் அதிகமாக உள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ

பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூரிலிருந்து காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி, வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். வழித்தடத்தில் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார். இதன்மூலம் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. சென்னை மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தையே பெருவாரியான மக்கள் பயன்படுத்தத் தொடங்காத நிலையில் மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டங்களுக்கான வடிவமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த இரண்டாம் கட்டப் பணிகளானது, மூன்று வழித் தடங்களுடன் மொத்தம் 108 கி.மீ தொலைவுக்கு 104 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் அதிகமாகப் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மெட்ரோ ரயில் அதிகபட்சக் கட்டணத்தை 60 ரூபாயாகக் குறைத்துள்ளது சி.எம்.ஆர்.எல் நிறுவனம். ஆனாலும் கட்டணத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. கிண்டியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு எலக்ட்ரிக் ரயிலில் 5 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பேருந்துகளில் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், மெட்ரோ ரயில் கட்டணம் 40 ரூபாயாக உள்ளது. 


மெட்ரோ

மெட்ரோ ரயில் அதன் சேவையை சென்னையில் தொடங்கிய புதிதில் இந்தச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. சென்னை மெட்ரோவின் முதல்கட்டக் கட்டமைப்புகள் முடிவடைந்த  நிலையில், இப்போது இதைப் பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது. தினந்தோறும் சென்னை மெட்ரோவை வார நாள்களில் 60,000 பேரும், விடுமுறை தினங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரும் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மூன்று தினங்களாக இலவசப் பயணத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் அளித்துள்ள நிலையில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயணம் செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயிலை அதிகப்படியானோர் பயன்படுத்த வைப்பது எப்படி என்பது குறித்து மெட்ரோ வடிவமைப்புப் பொறியாளர் மு.ராமநாதன் ``பேருந்து நிறுத்தம் மற்றும் எலக்ட்ரிக் ரயில்களின் சேவைகள் போன்று, மற்ற போக்குவரத்து சேவைகளை மெட்ரோ ரயில் நிறுத்தங்களோடு இணைக்கும்போது இதன் பயன்பாடு அதிகரிக்கும். அதன்மூலம் பெருவாரியான மக்கள் பொதுப் போக்குவரத்திற்கு மாறுவார்கள்” என்றார். தற்போது, சென்னை மெட்ரோ நிர்வாகம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கான போக்குவரத்துக்கு மெட்ரோ நிறுவனம் டாக்ஸி மற்றும் ஷர் ஆட்டோ சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவையை, கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 36,868 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.

இலவசமாக மெட்ரோ சேவை வழங்கப்பட்ட நாள்களில் அதிகப்படியானோர் இதைப் பயன்படுத்தினர். அதேபோல் கட்டணத்தைக் குறைத்தால் அதிகப்படியான மக்கள் மெட்ரோவைப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன என்பதை நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 


டிரெண்டிங் @ விகடன்