‘தேசிய நெடுஞ்சாலையில் ரௌடி கொடூரக் கொலை!’ - ஆற்காடு அருகே பயங்கரம் | Rowdy was brutally murdered at the National Highway in Arcot

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (13/02/2019)

கடைசி தொடர்பு:14:10 (13/02/2019)

‘தேசிய நெடுஞ்சாலையில் ரௌடி கொடூரக் கொலை!’ - ஆற்காடு அருகே பயங்கரம்

ஆற்காடு அருகே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்... ரௌடியை கொடூரமாகக் கொன்ற மர்ம நபர்கள், சடலத்தை சாலையோரம் வீசிவிட்டு தப்பினர். இச்சம்பவம், பொதுமக்களை பீதியடையச் செய்திருக்கிறது.

கொல்லப்பட்ட ரவுடி தமிழரசன்

வேலூர் சைதாப்பேட்டை கன்னிக்கோயில் தெருவைச் சேர்ந்த மதியழகனின் மகன், தமிழரசன் (25). கொலை, ஆள்கடத்தல் உள்பட பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ரௌடி. தமிழரசனின் மாமன் முறை உறவினரான சைதாப்பேட்டையைச் சேர்ந்த பிச்சைப் பெருமாள் என்பவர், மூன்று மாதங்களுக்கு முன்பு சத்துவாச்சாரி - காங்கேயநல்லூர் பாலாற்றில் முகம் சிதைக்கப்பட்டு, கொடூரமாகக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில், சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரபல ரௌடி வீச்சு தினேஷின் கூட்டாளிகளுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறப்பட்டது. 

கொல்லப்பட்ட ரவுடி தமிழரசன்

பிச்சைப் பெருமாளின் கொலைக்குப் பழிவாங்க, ரௌடி வீச்சு தினேஷ் சென்ற கார் மீது வேலூர் மத்திய சிறை அருகே பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, மற்றொரு ரௌடி கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில், ரௌடி வீச்சு தினேஷ் உயிர்தப்பினார். பின்னர், இந்த  ரௌடி கும்பலுக்குள் அடிக்கடி மோதல்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆற்காட்டை அடுத்த நந்தியாலம் பகுதியில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், ரௌடி தமிழரசன் இன்று காலை கொடூரமாகக் கொல்லப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார்.

கொல்லப்பட்ட இடத்தில் மோப்பநாயுடன் போலீஸ்

துடிக்கத் துடிக்க கழுத்தை அறுத்தும், மார்பில் கத்தியால் குத்திக்கிழித்தும், தலையின் பின்பக்கம் தாக்கியும் மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர். ரத்தினகிரி போலீஸார்சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ரௌடி தமிழரசனைக்கொன்ற நபர்கள் யார் என்பதுகுறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். முன்விரோதத் தகராறில், சத்துவாச்சாரியைச் சேர்ந்த பிரபல ரௌடி வீச்சு தினேஷின் கூட்டாளிகள், இந்தக் கொலையைச் செய்தனரா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

24 மணிநேரமும் பரபரப்பாக இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் இந்தக் கொலை நடந்துள்ளது. அருகில் மேல்விஷாரம் நகராட்சி அலுவலகம், எதிரில் பெட்ரோல் பங்க் என்று எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும். இப்படிப்பட்ட பகுதியில் ரௌடியைக் கொன்று வீசிய சம்பவம், பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.