`விரைவில் தமிழகம் குடிநீர் பஞ்சத்தை சந்திக்கும்' - எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்! | Tamil Nadu will soon meet drinking water famine says stalin

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (13/02/2019)

கடைசி தொடர்பு:15:10 (13/02/2019)

`விரைவில் தமிழகம் குடிநீர் பஞ்சத்தை சந்திக்கும்' - எச்சரிக்கும் மு.க.ஸ்டாலின்!

விரைவில் தமிழகமே குடிநீர் பஞ்சத்தை சந்திக்க இருக்கும் அவலம் ஏற்பட்டிருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.

ஸ்டாலின்

இதுகுறித்து அவர் சட்டப்பேரவையில் பேசுகையில், ``தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் மிகக் கடுமையாகும் ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய பூண்டி ஏரி, சோழவரம் ஏரி, ரெட்கில்ஸ் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய அனைத்து ஏரிகளின் நீர் மட்டுமும் படுபாதாளத்திற்குப் போய்விட்டது. 12.02.2019 நிலவரப்படி, 885 மில்லியன் கன அடி (Million Cubic Feet) நீர் இருப்பு மட்டுமே இருக்கிறது. இதே காலகட்டத்தில், 4 ஆயிரத்து 976 மில்லியன் கன அடி நீர் இருப்பு, கடந்த வருடம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உள்ள 33 மாவட்டங்களில், குறைந்தது 20 மாவட்டங்களில் நிலத்தடி நீர் படு மோசமாகக் குறைந்து விட்டதாக ஆய்வு அறிக்கைகள் வெளியாகிவருகின்றன.

குறிப்பாக, சென்னை மாநகர மக்களுக்குக் கிடைக்கவேண்டிய மழை அளவு 55 சதவிகிதம் குறைந்துவிட்டதால், குடிநீருக்கு அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டுமென்பதற்காக 157 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இது எதைக் காட்டுகிறது என்றால், ‘யானைப் பசிக்கு சோளப்பொரி’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. 2016-17, 2017-18 மற்றும் 2018-19 நிதிநிலை அறிக்கைகளில் மட்டும், ஏறக்குறைய 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு குடிநீர்த் திட்டங்களை நிறைவேற்றப் போவதாக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. எனவே, இந்த அ.தி.மு.க ஆட்சியில் 110 அறிவிப்புகள், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அறிவிப்புகளில் ஐந்து கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

ஸ்டாலின்

இந்த 5 திட்டங்களின் மதிப்பு மட்டும் எவ்வளவு என்றால், 9 ஆயிரத்து 692 கோடி ரூபாய். உங்களுடைய ஆட்சியிலே மொத்தமாக அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் கோடி ரூபாய் குடிநீர்த் திட்டங்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே, அரசு இதுகுறித்து ஒரு வெள்ளை அறிக்கையை இந்த மன்றத்தில் உடனடியாகத் தாக்கல்செய்ய வேண்டும்.

குடிநீர் பஞ்சத்தின் கொடுமை, அதனால் மக்கள் சந்திக்கும் அவலங்கள் இதையெல்லாம் மனதில் வைத்து, வருகிற கோடை காலத்தில் மக்களுக்கு ஏற்படப்போகும் அவதியைப் புரிந்துகொண்டு, அறிவித்த இக்குடிநீர் திட்டங்களை எல்லாம் உடனடியாகச் செயல்படுத்தக்கூடிய முயற்சியில் இந்த அரசு ஈடுபட வேண்டுமென வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் பேசினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க