`கூட்டணிக் கட்சிகளுக்கு இந்தத் தொகுதி இல்லை!' - காஞ்சியில் கலகம் தொடங்கிய தா.மோ.அன்பரசன் | DMK Secretary Anbarasan's decision regarding parliament election

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (13/02/2019)

கடைசி தொடர்பு:10:35 (14/02/2019)

`கூட்டணிக் கட்சிகளுக்கு இந்தத் தொகுதி இல்லை!' - காஞ்சியில் கலகம் தொடங்கிய தா.மோ.அன்பரசன்

மக்களவைத் தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னமே இந்த மாவட்டத்தில் உதிக்கவில்லை. இந்தமுறை மக்கள் மனதில் நமது சின்னத்தைப் பதிக்க வேண்டும்.

`கூட்டணிக் கட்சிகளுக்கு இந்தத் தொகுதி இல்லை!' - காஞ்சியில் கலகம் தொடங்கிய தா.மோ.அன்பரசன்

`காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க போட்டியிட வேண்டும்' என்பதை வலியுறுத்தி ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்ற இருக்கின்றனர் உடன்பிறப்புகள். `கூட்டணிக் கட்சிகளுக்கு இந்தத் தொகுதியை விட்டுத் தரக் கூடாது. உதயசூரியன் சின்னமே களத்தில் நிற்க வேண்டும்' எனப் பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன். 

ஸ்டாலினுடன் அன்பரசன்

தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக் கூட்டத்தை நடத்தி வருகிறது தி.மு.க. இதன் தொடர்ச்சியாக மாவட்டச் செயலாளர்களும் கிராம சபைக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். இதில் பங்கேற்ற அவரிடம், சாலைப் பிரச்னை, குடிநீர்ப் பற்றாக்குறை, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் நடைபெறும் முறைகேடு, ரேஷன் கடைகளில் விநியோகக் குளறுபடி ஆகியவை குறித்து பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். `தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும்' என உறுதி கொடுத்தார் அன்பரசன். இதன்பிறகு கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசியதுதான் ஹைலைட். 

ஸ்டாலின்

உடன்பிறப்புகளிடம் பேசிய தா.மோ.அன்பரசன், `எந்தக் காரணத்தை முன்னிட்டும் காங்கிரஸ் உட்பட கூட்டணிக் கட்சிகளுக்குக் காஞ்சிபுரம் தொகுதியை விட்டுத் தரக் கூடாது. அண்ணா பிறந்த மாவட்டம் இது. ஏற்கெனவே பா.ம.க ஏ.கே.மூர்த்திக்குக் கொடுத்தோம். காங்கிரஸ் கட்சியின் விஸ்வநாதனுக்குக் கொடுத்தோம். மற்ற கட்சிகளுக்கு இந்தமுறை கொடுத்துவிடக் கூடாது. சென்னையையொட்டிய புறநகர்ப் பகுதியாக இந்த மாவட்டம் இருக்கிறது. பல்வேறு தொழிற்பேட்டைகள் இருக்கின்றன. இந்த முறை நமக்குத்தான் ஒதுக்க வேண்டும் எனத் தலைமையிடம் எடுத்துக் கூறுவோம். `எந்தத் தொகுதியை வேண்டுமானாலும் கொடுங்கள். கூட்டணிக்குக் கட்சிகளுக்குக் காஞ்சியைக் கொடுக்கக் கூடாது' என்பதை வலியுறுத்துவோம். மக்களவைத் தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக உதயசூரியன் சின்னமே இந்த மாவட்டத்தில் உதிக்கவில்லை. இந்த முறை மக்கள் மனதில் நமது சின்னத்தைப் பதிக்க வேண்டும். இதுதொடர்பாக கிளைக் கழகங்களிலும் ஊராட்சிகளிலும் தீர்மானம் போட்டு, மாவட்டத்துக்கு அனுப்புங்கள்' எனக் கூறியிருக்கிறார். அவரது வேண்டுகோளை ஏற்று, தீர்மானம் நிறைவேற்றும் பணிகளைத் தொடங்க இருக்கின்றனர் உடன்பிறப்புகள். 

மல்லை சத்யா

அன்பரசனின் பேச்சு குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், ``2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி சார்பாக ம.தி.மு.க-வின் மல்லை சத்யா போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் சிறுவேடல் செல்வம் தோற்றார். காங்கிரஸ் சார்பில் விஸ்வநாதன் போட்டியிட்டார். ஆனால், அ.தி.மு.க-வின் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். கடந்த முறை தி.மு.க குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. இந்தத் தோல்விக்கு மல்லை சத்யா பிரதான காரணமாக இருந்தார். இந்தமுறை சீட் கொடுத்தாலும் செலவு செய்வதற்கு மரகதம் தயக்கம் காட்டுகிறார். `எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும்' என அ.தி.மு.க பிரமுகர் தனபால் முயற்சி செய்து வருகிறார். தி.மு.க தரப்பில் பையனூர் சேகர் என்பவரை முன்னிறுத்தும் முடிவில் அன்பரசன் இருக்கிறார். பையனூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு வீட்டு வரியைக் கொடுக்க மாட்டேன் எனத் துணிச்சலாக அறிவித்தவர் சேகர். சிறுவேடல் செல்வமும் வேட்பாளராகக் களமிறங்க விரும்புகிறார். 

அன்பரசன்

இதில், அன்பரசனின் ஆதரவு பையனூர் சேகருக்கு இருக்கிறது. தி.மு.க தெற்கு மா.செ சுந்தர் தரப்புக்கு சீட் கொடுத்தால், அவர்கள் வளர்ந்துவிடுவார்கள் என அன்பரசன் நினைக்கிறார். தி.மு.க உள்கட்சி மோதல், காஞ்சி முழுக்க நீடிக்கிறது. 640 ஊராட்சிகள், 6 சட்டமன்றத் தொகுதிகள் ஆகியவற்றில் தன்னுடைய வலுவைக் காட்டும் வகையில், தி.மு.க-வுக்கே இந்த முறை சீட் என்பதில் உறுதியாக இருக்கிறார் அன்பரசன். அதற்காகத்தான் ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றுமாறு அவர் கூறியிருக்கிறார். அதேநேரம், `கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் ம.தி.மு.க-வுக்கு காஞ்சிபுரம் தொகுதியை ஒதுக்குவார்கள்' என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் மல்லை சத்யா" என்றார் விரிவாக. 

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசனின் பேச்சு தொடர்பாக நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், `` தொகுதிப் பங்கீடு நடக்கும்போதுதான் காஞ்சிபுரம் தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்பது தெரியும். நாங்கள் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு மாவட்டப் பணிகளை செய்து வருகிறோம். அப்படியிருக்கும்போது, ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்புமாறு எந்த இடத்திலும் அன்பரசன் சொல்லவில்லை!" என்றார் உறுதியாக.