`நீட், கிளீன் அண்டு கிரீன்' - கமிஷனரின் கனவை நிஜமாக்கிய தரமணி இன்ஸ்பெக்டர்!   | In 2 moths Taramani police changed their station premises into greener

வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (13/02/2019)

கடைசி தொடர்பு:15:50 (13/02/2019)

`நீட், கிளீன் அண்டு கிரீன்' - கமிஷனரின் கனவை நிஜமாக்கிய தரமணி இன்ஸ்பெக்டர்!  

இன்ஸ்பெக்டர் பாஸ்கரால் உருவான பூங்கா

சென்னை போலீஸ் கமிஷனரின் ஆசை, கனவை தரமணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான காவலர்கள் , 2 மாதங்களில் நிறைவேற்றிk காட்டியிருக்கின்றனர். 

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், காவல் பணியோடு மனித நேய சேவையிலும் ஈடுபட்டுவருகிறார். தவறு செய்பவர்களைp பாரபட்சமின்றி தண்டிக்கும் கமிஷனர், கடமைகளைச் சரியாகs செய்பவர்களைp பாராட்டவும் தவறுவதில்லை. கமிஷனரின் இந்த அணுகுமுறை சென்னை காவலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இந்தநிலையில், தனது கட்டுப்பாட்டிலிருக்கும் காவல் நிலையங்களுக்கு அடிக்கடி, ரகசிய விசிட் அடிக்கும் சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சொல்லும் வாக்கியம் இதுதான் `நீட், கிளீன் அண்டு கிரீன்'. கமிஷனரின் இந்த வார்த்தையை அப்படியே நிறைவேற்றியிருக்கின்றனர் தரமணி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையிலான காவலர்கள். 

 இன்ஸ்பெக்டர் பாஸ்கரால் உருவான பூங்கா

தரமணி காவல் நிலையத்துக்கு சமீபத்தில் சென்ற கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இந்த இடத்தைக் கொஞ்சம் மாற்றுங்கள் என்று கூறியிருக்கிறார். கடந்த டிசம்பர் மாத இறுதியில் காவல் நிலையத்தின் முன்பகுதியைக் காவலர்களே சுத்தப்படுத்தினர். அதில் கண்ணைக் கவரும் மலர்கள், பயன்தரக்கூடிய காய்கறிகள், மூலிகைச் செடிகள் ஆகியவற்றை வளர்த்தனர். இதனால் தரமணி காவல் நிலையம், தற்போது கார்டனாகக் காட்சியளிக்கிறது. 

பூங்காவில் சிறிய குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மீன்கள் நீந்தி விளையாடுகின்றன. அது, பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கிறது. இந்தப் பூங்காவை, காவல் பணிக்குப் பாதிப்பில்லாமல் காவலர்களே பராமரித்துவருகின்றனர். தினமும் தண்ணீர் ஊற்றுவது, செடி, கொடிகளைப் பராமரிப்பது போன்ற பணிகளைக் காவலர்கள் தங்களுக்குள் பங்கீட்டுக் கொள்கின்றனர். காவல் பணி என்பது மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் மனஅழுத்தத்தோடு காணப்படும் காவலர்கள் பூங்காவில் அமர்ந்தால்போதும் அடுத்த சில நிமிடங்களில் இயற்கையோடு ஒன்றிப்போய்விடுகிறார்கள். மனமும் உடலும் புத்துணர்வு பெறுவதாக உணர்கின்றனர். காலை, மாலை நேரங்களில் தரமணி காவல்நிலைய காவலர் பூங்கா ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. அதைப் பார்வையிட மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்தப் பூங்கா இந்தளவுக்கு உருவாக, துணை கமிஷனர் சேஷன் சாய் மற்றும் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் காவலர்களின் முழு ஒத்துழைப்பே காரணம்.  

இன்ஸ்பெக்டர் பாஸ்கரால் உருவான பூங்கா


 இதுகுறித்து தரமணி காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்களிடம் கேட்டதற்கு, ``சென்னையில் முதல் முறையாக இந்தக் காவல் நிலையத்தை இயற்கையோடுகூடிய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளோம். காவல் நிலையத்தில் இடநெருக்கடி இருந்தது. இதனால் அதை விரிவுபடுத்த உயரதிகாரிகளின் அனுமதியைப் பெற்றோம். இந்தச் சமயத்தில்தான் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், எங்கள் காவல் நிலையத்துக்கு வந்திருந்தார். அவரின் உத்தரவின்பேரில் காவல் நிலையத்தில் பூங்கா அமைத்துள்ளோம். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் வேண்டாம் என்று தூக்கி வீசப்பட்ட பொருள்களைக் கொண்டுதான் தோட்டத்தை அமைத்துள்ளோம். பயன்தரக்கூடிய மூலிகைச் செடிகள், காய்கறிகளை வளர்த்துள்ளோம்.

தற்போது பாகற்காய், புடலங்காய் எனக் காய்கறிகள் காய்த்துவிட்டன. அதுபோல மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. பூங்காவில் உள்ள சிறிய குளத்தில் தாமரைச் செடிகளும் உள்ளன. பூங்காவைச் சுற்றி புல்வெளிகளை அமைத்துள்ளோம். காவல் நிலையத்திலிருந்து வீசும் தென்றல் காற்று இதமாக இருக்கிறது. பூங்காவைப் பார்க்கும்போது மனஅழுத்தம் குறைவதோடு கண்களுக்கும் குளிர்ச்சியாக இருக்கிறது. தோட்டத்தில் விளையும் காய்கறிகளை, காவலர்கள் சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பூங்காவில் 5 நிமிடம் அமைதியாக அமர்ந்திருந்தால் போதும் கண்டிப்பாக ஒரு மாற்றம் உங்களுக்குள் ஏற்படும். 

இன்ஸ்பெக்டர் பாஸ்கரால் உருவான பூங்கா

புகார் கொடுக்க வருபவர்களும் பூங்காவில் அமர்ந்து ஓய்வெடுத்துச் செல்கின்றனர். ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸில் உள்ள சிலரின் உதவியால்தான் திட்டமிட்டு பூங்காவை அமைத்துள்ளோம். இதுவே இந்தப் பூங்கா எல்லோருக்கும் பிடிக்கிறது. காவலர் பூங்கா உருவாக உறுதுணையாக இருந்த, ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸான இன்ஜினீயர் அருண், ஐசக் மற்றும் காவலர்கள் பாஸ்கர், சோலைமணி ஆகியோரின் பங்கு அதிகம். இந்தப் பூங்காவை 3,000 சதுர அடியில் அமைத்துள்ளோம், அதற்கு காவலர் பூங்கா எனவும் பெயரிட்டுள்ளோம்" என்றனர் மகிழ்ச்சியுடன்.