` யார் யாரிடம் சிக்கிக் கொண்டார்கள்?!' - பா.ஜ.க குறித்த கேள்வியால் கொதித்த எடப்பாடி பழனிசாமி | Discussion at Tamil Nadu Legislative Assembly

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (13/02/2019)

கடைசி தொடர்பு:16:30 (13/02/2019)

` யார் யாரிடம் சிக்கிக் கொண்டார்கள்?!' - பா.ஜ.க குறித்த கேள்வியால் கொதித்த எடப்பாடி பழனிசாமி

கடந்த 8-ம் தேதி இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் கடந்த ஒரு வாரமாக பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பட்ஜெட் மீதான இறுதி விவாதம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் நடந்த விவாதம் விறுவிறுப்பாக இருந்தது. 

தமிழக சட்ட சபை

காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் கே.ஆர் ராமசாமி : ‘ மத்திய அரசிடம் தமிழக அரசு சிக்கிக்கொண்டுள்ளது. பா.ஜ.க அரசு தமிழக அரசை மிரட்டிவைத்துள்ளது அதனால்தான் தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெறமுடியவில்லை’ எனக் கூறினார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : ‘ யார் யாரிடம் சிக்கிக்கொண்டது. கடந்த முறை தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் மத்திய நிதி அமைச்சராக (ப.சிதம்பரம்) இருந்தபோதே தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெறமுடியவில்லை. நாங்கள் யாரிடமும் சிக்கிக்கொள்ளவில்லை. தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் போராடித்தான் பெற்று வருகிறோம்’ எனப் பதில் கூறினார். 

கே.ஆர் ராமசாமி : ‘அதே நிதியமைச்சர் இன்னும் ஐந்து மாதங்களில் மீண்டும் மத்திய நிதி அமைச்சராகவுள்ளார்’ எனத் தெரிவித்தார். 

மின்துறை அமைச்சர் தங்கமணி : ‘ யாரும் யாரையும் மிரட்டுவது இல்லை. நீங்கள் (காங்கிரஸ்) முன்னதாக ஆட்சியில் இருக்கும்போது தி.மு.கவை மிரட்டிப் பணியவைத்து கூட்டணி பேரம் பேசினீர்கள்’ எனக் கூறினார். 

தமிழக சட்ட சபை

தி.மு.க தலைவர் ஸ்டாலின் : ‘தமிழக அமைச்சர் குட்கா வழக்கில் சிக்கி, அவரது வீடு இல்லம் போன்றவற்றில் மத்திய அரசு சி.பி.ஐ சோதனை நடத்தி உங்களை மிரட்டியது நினைவில் இல்லையா?’ எனக் கேள்வி எழுப்பினார். 

அமைச்சர் ஜெயக்குமார் : ‘ சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மேற்குவங்கத்தில் சி.பி.ஐ சோதனை நடந்தால்தான் கண்டிக்கிறார். முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் நடந்த சோதனைக்கு ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கவில்லை’ 

ஸ்டாலின் : ‘அமைச்சர் தவறான கருத்தைப் பதிவு செய்கிறார். தமிழக சட்டசபையில் சி.பி.ஐ சோதனை நடந்தபோது முதல் ஆளாகக் கண்டனம் தெரிவித்தது நான்தான்’ எனக் கூறினார். இவர்களின் காரசார விவாதம் சுமார் பத்து நிமிடங்கள் வரை நீண்டது. 

இதையடுத்து மீண்டும் பேசிய கே.ஆர் ராமசாமி : ’ வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிட அ.தி.மு.க தயாரா’ எனக் கேள்வி எழுப்பினார். 

அமைச்சர் செங்கோட்டையன் : ‘முன்னதாக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகுதான் அ.தி.மு.க என்னும் இயக்கம் அ.தி.மு.க என்ற தனிப்பெரும் கட்சியாக மாறியது’ 

எடப்பாடி பழனிசாமி

அமைச்சர் ஜெயக்குமார் : நீங்கள் (காங்கிரஸ்) யார் முதுகிலாவது ஏறி பயணம் செய்வதைதான் வழக்கமாக வைத்துள்ளீர்கள். தமிழகத்தில் தி.மு.க அல்லது அ.தி.மு.க இந்த இரு கட்சிகளின் ஆதரவு இல்லாமல் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற்றது கிடையாது’ 

கே.ஆர் ராமசாமி : ஜெயலலிதாவின் செல்வாக்கில்தான் தற்போது நீங்கள் இந்த இடத்தில் அமர்ந்துள்ளீர்கள். ஜெயலலிதா இறந்த பிறகு நடந்த ஆர்.கே நகர் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்தது. அவர் இறந்த பிறகு இன்னும் ஒரு தேர்தலைக் கூட நீங்கள் சந்திக்கவில்லை. உங்களின் செல்வாக்கு என்னவென்று தேர்தல் வந்தால் தெரியும்’ 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி : ` ஆம் நாங்கள் ஜெயலலிதாவின் செல்வாக்கில்தான் கட்சியை நடத்தி வருகிறோம். காங்கிரஸ் யார் தயவில் உள்ளது எனக் கூறுங்கள்?’ 

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் : `அ.தி.மு.க தனித்துப் போட்டியிடத் தயாராகவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் நாங்களும் தயார்’ எனக் கூறினார்.