ஜெயலலிதா இல்லாத சிறுதாவூர் பங்களா! ஒரு லைவ் ரிப்போர்ட்! – மினி தொடர்-1. | sirudhavoor Bungalow live report

வெளியிடப்பட்ட நேரம்: 10:41 (14/02/2019)

கடைசி தொடர்பு:10:41 (14/02/2019)

ஜெயலலிதா இல்லாத சிறுதாவூர் பங்களா! ஒரு லைவ் ரிப்போர்ட்! – மினி தொடர்-1.

ஜெயலலிதா இல்லாத சிறுதாவூர் பங்களா! ஒரு லைவ் ரிப்போர்ட்! – மினி தொடர்-1.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பல நாள்களில் தமிழகத்தின் அறிவிக்கப்படாத தலைமைச் செயலகமாகச் செயல்பட்ட இடம் சிறுதாவூர் பங்களா. பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள சிறுதாவூரிலிருந்து கொண்டே அரசியல் செய்தவர் அவர். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, அந்தப் பங்களாவின் வாயிலைக்கூட யாரும் நெருங்க முடியாது. பங்களா அமைந்துள்ள பகுதியையொட்டியுள்ள சாலையில் எந்த வாகனமும் நிறுத்த முடியாத அளவிற்கு போலீஸ் கெடுபிடி இருக்கும். பங்களாவிற்கு ஒரு கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் சிறுதாவூருக்குச் செல்லும் மண் சாலையில்கூட யாரும் செல்ல முடியாதபடி போலீஸார் அரண் அமைத்திருப்பார்கள். கிட்டத்தட்ட ராணுவக்கட்டுப்பாட்டில் இருப்பதைப் போல இருக்கும் சிறுதாவூர் பங்களா. ஜெயலலிதா  உயிரோடு இருந்தவரை கோலோச்சிக் காணப்பட்ட அந்தப் பங்களா, தற்போது எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக அங்கு  விசிட் அடித்தோம்.

ஜெயலலிதா

சிறுதாவூர் பங்களா ஒரு ஃப்ளாஷ்பேக்!

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூர் கிராமத்தில் இந்தப் பங்களா அமைந்துள்ளது. பங்களாவின் நுழைவுப் பகுதி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ளது. உள்ளே பங்களா தெரியாத அளவுக்கு மதில் சுவர் அருகே சுமார் 50 அடி அகலத்தில் சவுக்கு பயிரிடப்பட்டுள்ளது. பங்களாவைச் சுற்றிலும் பசுமையான வயல்வெளிகளும், தென்னை மரங்கள் அடங்கிய தோப்புகளும் உள்ளன. 2001-ல் ஜெயலலிதா, சிறுதாவூரில் தங்கத் தொடங்கியதும் பங்களாவைச் சுற்றிப் போடப்பட்டிருந்த மனைப்பிரிவுகளுக்கு யாரும் செல்ல முடியவில்லை. இதனால் பங்களாவையொட்டிய பகுதிகளில் புதர் மண்டிக் காணப்படுகிறது. பங்களாவிற்கு மேற்குப்பகுதியில் மனைப்பிரிவுகளும் அதையடுத்து விவசாய நிலங்களும் உள்ளன. நவம்பர் மாதத்திலிருந்து மார்ச் மாதம்வரை அங்கே ஒரு அடிக்கு மேல் தண்ணீர் இருக்கும். சேறும், சகதியுமாகக் காணப்படுவதுடன், புதர் மண்டிக் காணப்படுவதால், யாரும் அவ்வளவு எளிதாகச் செல்ல முடியாது.

வயலுக்கு நீர் பாய்ச்சும் உள்ளூர் பிரமுகர்கள் தவிர, அந்த இடத்திற்குப் புதிய நபர்கள் யாரும் வரமுடியாத அளவிற்குப் பாதுகாப்புக் கடுமையாக இருக்கும். சித்ரா என்பவரின் பெயரில் பங்களா உள்ளது. சசிகலா, இளவரசி பெயரிலும் அங்கே நிலங்கள் இருக்கின்றன. 116 ஏக்கர் பரப்பளவில் பங்களா நிலம் அமைந்துள்ளது. அத்துடன் சிறுதாவூர் பங்களா நிலத்தில் 36 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளது. இதில் 6 ஏக்கர் நீர் நிலைகள், தண்ணீர் வரத்துக் கால்வாய்கள் குளம், குட்டை உள்ளிட்டவை உள்ளன.

காவல்துறையினர்

ஹைடெக் மற்றும் சொகுசு வசதிகள்!

சுமார் 17,500 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ளது பங்களா. லிஃப்ட், சொகுசு இருக்கைகள், நீச்சல் குளம், பூங்கா உள்ளிட்ட வசதிகள் அங்கே இருக்கின்றன. ஜெயலலிதாவின் பாதுகாப்பிற்காக நவீன வசதிகள் கொண்ட தொலைத்தொடர்பு சாதனங்கள், கன்ட்ரோல் ரூம், போலீஸ் குடியிருப்பு, பணியாளர் குடியிருப்பு ஆகியவை பங்களா சுற்றுச்சுவருக்குள்ளேயே அமைந்திருந்தன. ஜெயலலிதா நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக வாக்கிங் ட்ராக், ஓய்வு நேரத்தில் தோட்டங்களைச் சுற்றிப்பார்க்க பேட்டரி கார் ஆகியவையும் இருந்தன. பங்களாவைச் சுற்றியுள்ள நிலங்களில் தர்பூசணி, வேர்க்கடலை, காய்கறிகள் போன்றவை பயிரிடப்படுவதை பேட்டரி காரில் சென்று சுற்றிப் பார்ப்பார் ஜெயலலிதா.

மினி கன்ட்ரோல் ரூம்

நாள் ஒன்றுக்கு இரண்டு ஷிப்டுகள் வீதம் டி.எஸ்.பி. ஒருவரின் தலைமையில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையைச் சேர்ந்த 30 பேர், லோக்கல் காவல்துறையினர் 15 பேர் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். ஒரு டி.எஸ்.பி, இரண்டு இன்ஸ்பெக்டர், இரண்டு காவலர்கள்  அடங்கிய மினி கன்ட்ரோல் ரூம் ஒன்றும் பங்களா அருகிலேயே அமைந்திருந்தது. நவீன வசதிகள் கொண்ட இந்த கன்ட்ரோல் ரூம் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் ஒட்டுமொத்த பங்களாவையும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. பங்களாவில் ஜெயலலிதா தங்கும் காலங்களில் கறுப்புப் பூனைப்படை, சிறப்புப் பாதுகாப்புப் படை, கடலோரக் காவல் படை எனப் பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துவிடும். 2016 சட்டமன்றத் தேர்தலின்போது சிறுதாவூரில் கன்டெய்னர்கள் அடங்கிய லாரிகள் சிறுதாவூருக்குச் சென்றதாகவும், அதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப் பணம் இருந்ததாகவும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சொன்ன குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. இதனால் பங்களாவில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. அதுவே சிறுதாவூர் பங்களாவிற்கு அளிக்கப்பட்ட கடைசி உச்சகட்டப் பாதுகாப்பாக அமைந்துவிட்டது.

காவல்துறையினர் சிறுதாவூர் பங்களாவிற்கு பாதுகாப்பு

``ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது, சிறுதாவூர் பங்களாவில் இருந்த விலை உயர்ந்த பொருள்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் அங்கிருந்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா சிறைக்குச் சென்றுவிட்டார். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனதும் படிப்படியாகப் பாதுகாப்பு குறைக்கப்பட்டு பங்களாவிற்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டது. தினகரன் கட்டுப்பாட்டில் பங்களா இருந்தாலும் தினகரன் உட்பட யாரும் பங்களா பக்கம் செல்வது கிடையாது" என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

சிறுதாவூர் பங்களா

சிறுதாவூர் பங்களா அமைந்துள்ள முகப்புப் பகுதியை ஒரு மாலை நேரத்தில் அடைந்தோம். வழக்கமாகக் காவலர்கள் கெடுபிடி அதிகம் இருக்கும். ஆனால், இப்போது அந்தப் பகுதியில் ஒரு காவலர்கூடக் கண்ணில் படவில்லை. பெரிய கேட் மூடப்பட்டிருக்க, பக்கத்தில் உள்ள சிறிய வாயில் கதவு மட்டும் திறந்த நிலையில் பங்களா இருந்தது. அதன் வழியாக உள்ளே நுழைந்தோம்…

-தொடரும்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்