`சிறு விவசாயிகள் போராடவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்!’ - கொதிக்கும் வைகோ | Vaiko attends power grid scheme discussion meeting with tirupur farmers

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (13/02/2019)

கடைசி தொடர்பு:19:10 (13/02/2019)

`சிறு விவசாயிகள் போராடவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்!’ - கொதிக்கும் வைகோ

வைகோ

திருப்பூர் மாவட்டம் நீலிக்கவுண்டம்பாளையம் பகுதியில் மத்திய அரசின் உயர்மின் கோபுர திட்டம் தொடர்பாக விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அப்பகுதி சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் கலந்துகொண்டு உயர்மின் கோபுர திட்டத்துக்கு எதிரான தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் கலந்துகொண்டார். 

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ``தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் மத்திய அரசு பல்வேறு விஷயங்களில் கேடு செய்து வருகிறது. இந்த உயர்மின் கோபுரத் திட்டத்தால் குறைந்த அளவு நிலங்களை வைத்து விவசாயம் செய்துவருபவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 

தங்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்க நினைக்கும் இந்த விவசாயிகளையும் காவல்துறையினர் மிரட்டுகின்றனர். இதனால் சிறு விவசாயிகள் போராடவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
காவல்துறையைப் பயன்படுத்தி, விவசாயிகளை அச்சுறுத்தி, அவர்களது நிலங்களை அவர்களுக்கே தெரியாமல் அபகரிக்கும் அயோக்கியத்தனமான முறை இது.

உயர்மின் கோபுரத் திட்டத்தில்தான் கோடிக்கணக்கில் பணம் திருட முடியும். கேபிள் மூலமாகப் பதித்தால் பணம் பண்ண முடியாது. எனவே, இந்த உயர்மின் கோபுரத் திட்டத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் அ.தி.மு.கவைச் சேர்ந்த விவசாயிகளும் தங்களை இணைத்துக்கொண்டு போராட முன்வர வேண்டும். இந்த ஆட்சி ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு காட்டாட்சியாக, சர்வாதிகார ஆட்சியாக இருக்கிறது'' என்றார்.