சென்னை மெரினாவில் உடைந்த திட்டுகளாக ஒதுங்கிய எண்ணெய்க் கழிவுகள் | Oil waste washed ashore in marina create panic among fishermen

வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (13/02/2019)

கடைசி தொடர்பு:20:19 (13/02/2019)

சென்னை மெரினாவில் உடைந்த திட்டுகளாக ஒதுங்கிய எண்ணெய்க் கழிவுகள்

எண்ணெய்க் கழிவுகள்

சென்னை மெரினா கடற்கரையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் எண்ணெய்க் கழிவுகள் சிறிய சிறிய உடைந்த கட்டிகளாக கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளன. இந்தக் கழிவுகள் மெரினாவிலிருந்து திருவான்மியூர் கடற்கரைப் பகுதி வரை கரை ஒதுங்கியுள்ளதாக  மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாலை 4 மணியிலிருந்து காலை 9 மணி வரை அதிகளவில் கரை ஒதுங்கிய இந்தக் கழிவுகள், அதன்பின் குறையத் தொடங்கியுள்ளன. தற்போது கழிவுகள் கரை ஒதுங்குவது பெரும்பாலும் நின்றுவிட்டது எனவும் தெரிவித்தனர். ஆனால், கரை ஒதுங்கிய கட்டிகள் போன்ற எண்ணெய்க் கழிவுகள் குப்பையுடன் குப்பையாக கலந்து அடையாளம் தெரியாதபடி மாறி வருகின்றன. கழிவுகள் கரை ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இவை என்ன கழிவுகள். கழிவுகள் எப்படி ஏற்பட்டன. இதனால் மீன் வளம் பாதிக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகள் மீனவர்களிடையே எழுந்துள்ளன.

இதுதொடர்பாக சென்னை காமராஜர் துறைமுக அதிகாரிகளிடம் பேசியபோது, ``மெரினா கடற்கரையோரத்தில் கழிவுகள் ஒதுங்கியது குறித்த தகவல்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. மேலும், துறைமுகத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. கழிவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்படும்" எனக் கூறியுள்ளனர். ஜனவரி 28, 2017-ல் எண்ணூர் கடற்கரையில் கப்பல்கள் மோதியதில் எண்ணெய்க் கழிவுகள் கடலில் மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்தின. கடலின் இயல்புத்தன்மையே முற்றிலும் மாறிப்போனது. அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் சிறிய அளவில் கழிவுகள் வெளியேறினாலும் அதை அரசு கவனத்தில் கொண்டு மீனவர்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்கின்றனர் மீனவ தரப்பினர்.