ஆட்சியரை சந்திக்கமுடியாத விரக்தியில் முதியவர் தீக்குளிப்பு! | Elderly man attempts suicide in Theni Collector office premises

வெளியிடப்பட்ட நேரம்: 20:16 (13/02/2019)

கடைசி தொடர்பு:20:16 (13/02/2019)

ஆட்சியரை சந்திக்கமுடியாத விரக்தியில் முதியவர் தீக்குளிப்பு!

ஆட்சியரை பார்த்து மனு கொடுக்க முடியாத விரக்தியில் முதியவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா, குன்னூர் கிராமம் அன்னை இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவ பெருமாள் என்பவரின் மகன் முனியாண்டி (வயது 57). இவர் இன்று புகார் மனு ஒன்றுடன் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவை சந்திக்க வந்துள்ளார். ஆனால், நீண்ட நேர காத்திருப்புக்குப் பின்னர், ஆட்சியரைச் சந்திக்க முடியாத விரக்தியில் தான் கொண்டுவந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாகத் தீயை அணைத்து, அவரை க.விலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உடலில் 70 சதவிகிதத் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலைக்கு முயன்ற முனியாண்டி

தன் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதற்காக ஏஜென்ட் ஒருவரிடம் பணம் கொடுத்துள்ளார். அவர், போலியான நபர் என்பது தெரியவரவே பணத்தை இழந்த முனியாண்டி, அது தொடர்பாக புகார் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லாததால், ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுவாகவே ஆட்சியர் பல்லவி பல்தேவ், பொதுமக்களை சந்திக்க மறுப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவிக்கிறார்கள். இந்தநிலையில், அது தொடர்பாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதியவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் தேனி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர், மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிகிறாரா என அலுவலக வட்டாரத்தில் விசாரித்தபோது, ``பல்லவி பல்தேவ் தேனி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அரசுக் கோப்புகள் நிலுவையில் உள்ளன. திங்கள்கிழமைகளில் மட்டுமே மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிகிறார். அதிலும் பலமுறை மாவட்ட வருவாய் அலுவலர்தான் மக்களிடம் குறைகளைக் கேட்டறிவார். மக்களை சந்தித்துக் குறைகளைக் கேட்டால்தான் மக்களுக்கு என்ன தேவை என்பது புரியும்" என்று ஆதங்கப்பட்டனர்.