`பட்டாசுத் தொழில் மீண்டும் நடைபெறுமா?’ - உற்பத்தியாளர் சங்க நிர்வாகியின் பதில் | Central government should consider the livelihood of crackers industry labours

வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (13/02/2019)

கடைசி தொடர்பு:20:59 (13/02/2019)

`பட்டாசுத் தொழில் மீண்டும் நடைபெறுமா?’ - உற்பத்தியாளர் சங்க நிர்வாகியின் பதில்

`பட்டாசுத் தொழில் மீண்டும் நடைபெறுமா?’ - உற்பத்தியாளர் சங்க நிர்வாகியின் பதில்

ட்டாசுத் தொழிலுக்கு எதிரான மனநிலையிலேயே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்ளது என்றும், இதனால், இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் பட்டாசு உற்பத்தியாளர் சங்க நிர்வாகி ராஜப்பன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறை உயரதிகாரிகளை இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர் சங்க இணைச் செயலர் ராஜப்பன் சந்தித்தார். அப்போது அவர், ``உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கிவந்த நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று வலியுறுத்தினார்.

சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இந்தத் தொழிலைப் பாதுகாக்க வலியுறுத்தி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, சமீபத்தில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அவருடன் பட்டாசு உற்பத்தியாளர் சங்க இணைச் செயலர் ராஜப்பன், முன்னாள் செயலர் வெங்கடேஷ் ஆகியோரும் சென்றிருந்தனர். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனை சந்தித்த அவர்கள், இந்தத் தொழில் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து, அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய ராஜப்பன், ``டெல்லியை மட்டுமே இந்தியாவாகக் கருதும் நிலை உள்ளது. டெல்லியில் ஏற்பட்ட மாசு மற்றும் புகையைக் காரணம்காட்டி, நான்கு நிபந்தனைகளுடன் பட்டாசு உற்பத்திக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. `காலை 6 முதல் இரவு 10 மணிவரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம். சரவெடிகள் தயாரிக்கலாம்' என ஏற்கெனவே உத்தரவிட்ட நீதிமன்றம், தற்போது அதற்குக் கடும் கட்டுப்பாடு விதிக்கிறது. உலகில் எந்தவொரு நாட்டிலும் பேரியம் நைட்ரேட்டுக்குத் தடை இல்லை. ஆனால், நம் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பட்டாசு தொழில் பற்றி நிர்வாகி ராஜப்பன்`பசுமைப் பட்டாசு' என்றால் என்னவென்றே தெரியவில்லை. பேரியம் நைட்ரேட் என்பது மிகவும் ஆபத்தான வேதிப்பொருள் ஒன்றும் இல்லை. கடல் நீரில் இருந்து எடுக்கப்பட்டு நாம் பயன்படுத்தும் உப்பு போன்றதுதான் பேரியம் நைட்ரேட்டும். சாதாரண உவரி மண்ணில் இருந்து எடுக்கப்படும் இந்த பேரியம் நைட்ரேட்டால் எந்தவிதப் பாதிப்பும் இல்லை. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனைத் தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறையின் இணைச் செயலர் ரிதீஷ்குமார் சிங்கையும் சந்தித்தோம். அவர்தான் பட்டாசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தவர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், துறைசார்ந்த நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தாமல் அவர் மனுவில் குறிப்பிட்ட கருத்துகளை வைத்து மட்டுமே தீர்ப்பளித்துள்ளது. 

ரிதீஷ்குமார் சிங், இந்தத் தொழிலுக்கு எதிரான மனநிலையில்தான் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவர் தன் அலுவலகப் பணியாளர்களை அழைத்து 'பட்டாசு வேண்டுமா?' எனக் கேட்டார். அதற்கு அவர்கள், 'பட்டாசு பயன்படுத்துவதால் காற்று மாசு ஏற்படும். எனவே எங்களுக்கு வேண்டாம்' எனத் தெரிவித்தனர். பட்டாசு வெடிப்பதால்தான் ஓசோன் மண்டலம் பாதுகாப்பாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அதைவிட பலமடங்கு வாயுக்களை வெளியிடும் கார்கள், வாகனங்கள், தொழிற்சாலைகளுக்கு இல்லாத தடை பட்டாசுக்கு மட்டும் ஏன் விதிக்கப்பட்டுள்ளது? உயர் பொறுப்பில் உள்ள ஒரு தனிநபர் நினைத்தால் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்துவிடுவார் என்பதற்கு இந்தப் பிரச்னையே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தத் தடைக்குப் பின்னால் என்ன இருக்கிறது எனத் தெரியவில்லை. டெல்லியைப் பொறுத்தவரை பட்டாசுக்கு எதிரான மனநிலைதான் உள்ளது. பட்டாசுத் தொழில் மீண்டும் நடைபெறுமா என்பது சந்தேகமாக உள்ளது" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்