சிறை விதிகளை மீறியதாகச் சலுகைகள் ரத்து? - சாகப்போவதாக முருகன் உருக்கம் | Donate my body to Medical research says, Rajiv murder case convict murugan

வெளியிடப்பட்ட நேரம்: 23:15 (13/02/2019)

கடைசி தொடர்பு:23:15 (13/02/2019)

சிறை விதிகளை மீறியதாகச் சலுகைகள் ரத்து? - சாகப்போவதாக முருகன் உருக்கம்

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் முருகன், ``நான் திடீரென இறந்துவிட்டால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என் உடலைத் தானமாக பெற்று அரசு மருத்துவமனைக்கு வழங்கட்டும்’’ என்று உருக்கமாகக் கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நளினி, அவரின் கணவர் முருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்காக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பியது. இதுதொடர்பாக, ஆளுநர் எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பதால், ஏழு பேரும் கடுமையான மனஉளைச்சலில் உள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனும், அவரின் மனைவி நளினியும் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள்.

இதனால், அவர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சிறையில் உள்ள மருத்துவமனையில் இருவருக்கும் குளுக்கோஸ் ஏற்றப்பட்டன. இருவரையும் வழக்கறிஞர் புகழேந்தி 13-ம் தேதி மாலை சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், ``தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் நளினி, முருகனின் உடல்நிலை மிகவும் மோசமாகியிருக்கிறது. சிறைக்குள் திடீரென இறந்துவிட்டால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, என் உடலைத் தானமாக பெற்று அரசு மருத்துவமனைக்கு வழங்கட்டும் என்று முருகன் உருக்கமாகக் கடிதம் எழுதி சிறைக் கண்காணிப்பாளர் ஆண்டாளிடம் கொடுத்துள்ளதாக’’ கூறினார்.
 
இதனிடையே, சிறை விதிகளை மீறி உணவு உண்ணாமல் இருப்பதால் நளினி, முருகனுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றன. வழக்கறிஞரைத் தவிர, பிற பார்வையாளர்கள் அவர்களைச் சந்திக்க முடியாது. உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்தால், நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள்களுக்கு ஒருமுறை நளினியும், முருகனும் சந்தித்துப் பேசும் சலுகையும் ரத்துசெய்யப்படும் என்று சிறைத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.