‘சாதி-மதம் அற்றவர் என்று சான்றிதழ்!’ - சமூக மாற்றத்திற்கான வலுவான விதையாக மாறிய பெண் | Vellore Women Get 'No-Caste-No-Religion’ Certificate

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (14/02/2019)

கடைசி தொடர்பு:00:00 (14/02/2019)

‘சாதி-மதம் அற்றவர் என்று சான்றிதழ்!’ - சமூக மாற்றத்திற்கான வலுவான விதையாக மாறிய பெண்

‘சாதி-மதம் அற்றவர்’ என்று வருவாய்த் துறை மூலம் சான்றிதழ் பெற்ற திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞருக்கு, பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிகின்றன.

சிநேகா

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டையைச் சேர்ந்தவர் பார்த்திபராஜா. திருப்பத்தூரில் உள்ள தூயநெஞ்சக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிவருகிறார். சிறந்த எழுத்தாளரும் கூட. இவரின் மனைவி ம.ஆ.சிநேகா. வழக்கறிஞரான இவருக்குத் தான், ‘‘சாதி-மதம் அற்றவர்’’ என்று திருப்பத்தூர் உதவி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் மற்றும் தாசில்தார் சத்தியமூர்த்தி சான்றிதழ் வழங்கி பெருமைச் சேர்த்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே, ‘சாதி-சமயம் அற்றவர்’ என்று அரசு அங்கீகாரம் பெற்ற முதல் மனிதர் என்கிற பெருமையை பெண் வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா பெற்றிருக்கிறார்.

சாதி - மதம் அற்றவர்

காதலித்து, சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட தன்னுடைய பெற்றோர் ஆனந்தகிருஷ்ணன்-மணிமொழி பெயர்களின் முதல் எழுத்துகளை ‘இனிஷியலாக’ சேர்த்திருக்கிறார். பெற்றோரைப் போலவே பேராசிரியர் பார்த்திபராஜாவை காதலித்துச் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார் ம.ஆ.சிநேகா. சாதி-மதச் சடங்குகளை செய்யாமல் தாலி போன்ற அடையாளங்களைப் பயன்படுத்தாமல் புரட்சிகரமாக இவர்களின் திருமணம் நடைபெற்றது. தங்களின் மூன்று மகள்களைச் சாதி, மத அடையாளமின்றி வளர்த்துவருகிறார்கள்.

‘‘சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... சாதி, மத வர்க்கமற்ற சமூகத்திற்கான முதல் புள்ளியாக திகழ்கிறார். சமூக மாற்றத்திற்கான வலுவான விதையாக மாறியிருக்கிறார்’’ என்று பல்வேறு தரப்பினரால், வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா பாராட்டப்பட்டுவருகிறார்.