'மணல் குவாரியை நீங்கள் தடைசெய்கிறீர்களா நாங்கள் செய்யட்டுமா?' - கொந்தளித்த திருமாவளவன் | sand quarry Issue Thirumavalavan Slams TN Government

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (14/02/2019)

கடைசி தொடர்பு:10:25 (14/02/2019)

'மணல் குவாரியை நீங்கள் தடைசெய்கிறீர்களா நாங்கள் செய்யட்டுமா?' - கொந்தளித்த திருமாவளவன்

''மணல் குவாரியில், கடந்த 9 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி அளவிற்குக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உடனே மணல் குவாரியை தடைசெய்யுங்கள், இல்லையேல் நாங்கள் செய்யவைப்போம்'' என தமிழக அரசை கடுமையாக எச்சரித்தார் தொல்.திருமாவளவன்

                                            

அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில், மக்கள் விரும்பம் இல்லாமல் அரசு மணல் குவாரி செயல்பட்டுவருகிறது. 
இதைக் கண்டித்து, திருமானூர் பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்புக் குழு எனப் பல அமைப்பினர் கலந்துகொண்டனர். 

                                             

கூட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், ”மாட்டு வண்டியில் மணல் அள்ளினால் அது குற்றம். ஆனால், அரசே அள்ளினால் அதற்குப் பெயர் என்ன என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். திருமானூரில் மட்டும் மணல் குவாரி செயல்படக் கூடாது என்பது நோக்கம் இல்லை. தமிழத்தில் எங்கும் மணல் குவாரி செயல்படக் கூடாது என்பதற்கே இந்த ஆர்ப்பாட்டம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற கொள்ளை நடைபெறவில்லை. தமிழகத்தில் மட்டுமே இது போன்ற மணல் கொள்ளையில் அரசு ஈடுபடுகிறது. 

                                          

 
மணலை மனிதன் உற்பத்திசெய்ய முடியாது. ஆனால், பாறையை உடைத்து எம் சென்ட்டு மணல் தயாரிக்கப்படுகிறது. மணல், நிலக்கரி, வயல் உற்பத்தி ஆக, பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. மணல் இயற்கையின் வரப்பிரசாதம். இதுதான் நிலத்தடி நீரை உள்வாங்கிப் பாதுகாக்கிறது. ஆனால், மணல் கொள்ளைக்கு அரசே துணைபோவது வேதனையாக இருக்கிறது. 

                                               
''மணல் குவாரியில், கடந்த 9 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இனியும் தாமதிக்காமல் மணல் குவாரியை தடைசெய்ய வேண்டும் இல்லையேல் நாங்கள் தடைசெய்யவைப்போம்'' என எச்சரித்தார். அதேபோல, அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில், கதவணைகூடிய தடுப்பனை கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.