‘மதம் மாறுவதைவிட மனம் மாறுவதே சிறப்பு!’ - திருப்பத்தூர் பெண்ணுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | Kamal Hassan congratulates Tirupathur Women

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (14/02/2019)

கடைசி தொடர்பு:09:00 (14/02/2019)

‘மதம் மாறுவதைவிட மனம் மாறுவதே சிறப்பு!’ - திருப்பத்தூர் பெண்ணுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

‘சாதி,மதம் அற்றவர்’ என்று வருவாய்த் துறை மூலம் சான்றிதழ் பெற்ற திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞருக்கு, ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிநேகா

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன் பேட்டையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ம.ஆ.சிநேகா, ‘சாதி,மதம் அற்றவர்’ என்கிற சான்றிதழை வருவாய்த் துறை அதிகாரிகளிடம் போராடிப் பெற்றிருக்கிறார். ‘‘சாதிய அமைப்பிற்கு அடையாளமாக சாதிச் சான்றிதழ் இருப்பதைப் போல, சாதி-மதம் அற்றவர்களின் வாழ்விற்கு ஒரு அடையாளமாக இச்சான்று அமைந்திருப்பதாகவும், என்ன சாதி என்று சொல்வதற்கே உரிமை இருக்கும் நிலையில், சாதி இல்லை, மதம் இல்லை என்று சொல்வதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்கிறாய்’’ என்றும் பல்வேறு தரப்பிலிருந்து, அந்த வழக்கறிஞருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

கமல்ஹாசன்

இந்த நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன்  ட்விட்டரில், வழக்கறிஞர் ம.ஆ.சிநேகாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். ‘‘தமிழ் மகள் சிநேகாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். மதம் மாறுவதைவிட மனம் மாறுவதே சிறப்பு. வா மகளே வா... புதுயுகம் படைப்போம். சாதியற்ற உலகம் சாத்தியமில்லை என இனியும் அடம்பிடிப்போர்க்கு இடம் ஒதுக்கீடு செய்வோம். மக்கள் நீதியே மய்யம் கொள்ளும். நாளை நமதே. நிச்சயம் நமதே!’’ என்று கமல்ஹாசன் ‘ட்வீட்’ செய்துள்ளார்.