`இரண்டு வாயில்களிலும் தர்ணா; அதிரடிப்படை பாதுகாப்பில் கிரண் பேடி' - தொடர் பதற்றத்தில் புதுச்சேரி! | puducherry cm narayanasamy continues his dharna protest

வெளியிடப்பட்ட நேரம்: 07:55 (14/02/2019)

கடைசி தொடர்பு:08:19 (14/02/2019)

`இரண்டு வாயில்களிலும் தர்ணா; அதிரடிப்படை பாதுகாப்பில் கிரண் பேடி' - தொடர் பதற்றத்தில் புதுச்சேரி!

புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன் அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

புதுச்சேரி தர்ணா

இரண்டு வாரங்களுக்கு முன் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, கட்டாய ஹெல்மெட் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் கடந்த 11-ம் தேதி முதல் கட்டாய ஹெல்மெட் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும், மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், லைசென்சும் பறிமுதல்செய்யப்படும் என்றும் டிஜிபி சுந்தரி நந்தா உத்தரவு பிறப்பித்தார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகன எண்களைக் குறித்து, நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பி, அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி.

தர்ணா

கிரண் பேடியின் இந்த உத்தரவு மக்களைக் கொந்தளிக்க வைத்தது. அதேபோல, அ.தி.மு.க, தி.மு.க, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் இந்தச் சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கின. இதேபோல, காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாகத் தனது எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை நடத்திய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திடீரென ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதோடு, ஆளுநர் மாளிகையின் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். இந்தத் தகவல் பரவியதும், காங்கிரஸ் தொண்டர்களும் கூட்டணிக் கட்சியான தி.மு.க-வின் தொண்டர்களும் அங்கு குவிந்தனர்.

அதிரடி படை

முதல்வர் நாரயாணசாமி உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களும் மொத்தமாக ஆளுநர் மாளிகையின் முன் போராட்டத்தில் அமர்ந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பதற்றத்தில் இருக்கிறது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதல்வர் ஒருவர் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டத்தில் அமர்வது இதுவே முதல் முறை. ஆளுநர் கிரண் பேடி, பின்புற வாயில் வழியாக ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியேறிவிடாதபடி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நமச்சிவாயம் ஆகியோர் அங்கு அமர்ந்திருக்கிறார்கள். இரவு முழுவதும் பனியையும் பொருட்படுத்தாமல் தர்ணாவில் ஈடுபட்டனர். முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.       ஏ-க்கள் என அனைவருமே ஆளுநர் மாளிகை முன்பு தரையிலேயே படுத்து உறங்கினர்.

கிரண் பேடி

இந்நிலையில், இன்றும் தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார் நாராயணசாமி. அவரின் போராட்டத்தால் ஆளுநர் மாளிகை முன்பு துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சென்னை, நெய்வேலியிலிருந்து புதுச்சேரிக்கு அதிவிரைவு அதிரடிப்படை, தொழில் பாதுகாப்புப் படை வரவழைக்கப்பட்டுள்ளன. இதேபோல அரக்கோணம், ஆவடியில் இருந்து Rapid action force படையினர் 400 பேர் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளனர். 2-வது நாளாக முதல்வர் நாராயணசாமி, எம்.எல்.ஏ-க்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ள நிலையில், தலைமைச்செயலாளரின் கோரிக்கையை ஏற்று உள்துறை அமைச்சகம் படைகளை அனுப்பிவைத்துள்ளது. தற்போது, அதிரடிப்படையினர் கட்டுப்பாட்டில் கவர்னர் மாளிகை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கூடுதல் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நாராயணசாமியின் தர்ணாவுக்கு மத்தியில், துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சென்னைக்கு சென்றுள்ளார் . அதிரடிப்படையினர் பாதுகாப்புடன் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த கிரண் பேடி, சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காகச் செல்வதாக தகவல் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க