`பணிச் சுமையால் சண்டை; தூக்குப் போட்டுக்கிட்டார்' - சோகத்தை ஏற்படுத்திய மதுரை போலீஸ்! | police constable suicide in madurai

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (14/02/2019)

கடைசி தொடர்பு:13:45 (14/02/2019)

`பணிச் சுமையால் சண்டை; தூக்குப் போட்டுக்கிட்டார்' - சோகத்தை ஏற்படுத்திய மதுரை போலீஸ்!

மதுரையில் இன்று, போலீஸ் ஏட்டு ஒருவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட ராமர்

மதுரை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்துவந்தார் ராமர் (29). கான்ஸ்டபிளாகப் பணியாற்றிய இவர், தற்போது போலீஸ் ஏட்டாகப் பணி உயர்வு பெற்று, பயிற்சி எடுத்துவந்தார். மனைவி  ஆனந்தம் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்துவந்தவர், இன்று அதிகாலை சுமார் 1.30 மணியளவில் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் போலீஸ் குடியிருப்புப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தல்லாகுளம் போலீஸார், இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். 

இதுதொடர்பாக ராமரின் உறவினர்கள் கூறுகையில், "பணிச்சுமை காரணமாக அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். இதனால் மனமுடைந்த ராமர், பலமுறை தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கவும், நேற்று இரவு அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், வீட்டிலிருந்த ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்" என்றனர். 

மேலும், ராமரின் தற்கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை செய்துவருகின்றனர். அவரது இறப்புக்கு பணிச்சுமை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று, உசிலம்பட்டி பகுதியில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பால், சதீஷ் என்கிற போலீஸ்காரர் தற்கொலைசெய்துகொண்டார். இன்று, ராமர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.