`9 ஆண்டுகளாகப் போராடி இந்தச் சான்றிதழைப் பெற்றேன்' - வழக்கறிஞர் சிநேகா பேட்டி  | tirupathur advocate sneha talks about his struggles

வெளியிடப்பட்ட நேரம்: 13:16 (14/02/2019)

கடைசி தொடர்பு:13:39 (14/02/2019)

`9 ஆண்டுகளாகப் போராடி இந்தச் சான்றிதழைப் பெற்றேன்' - வழக்கறிஞர் சிநேகா பேட்டி 

திருப்பத்தூர் வழக்கறிஞர் சிநேகா

``சாதி, மதம் அற்றவர்’ என்ற சான்றிதழை 9 ஆண்டுகள் போராடிப் பெற்றிருக்கிறேன்'' என திருப்பத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சிநேகா நம்மிடம் கூறினார். 

 யார் இந்த சிநேகா? 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், இரட்டைமலை சீனிவாசன் பேட்டையைச் சேர்ந்தவர் சிநேகா. வழக்கறிஞர். இவரின் கணவர், பார்த்திபராஜா. பேராசிரியர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். சிநேகாவின் அப்பா ஆனந்தகிருஷ்ணன், அம்மா மணிமொழி. சிநேகாவை பள்ளியில் சேர்க்கச் சென்ற ஆனந்தகிருஷ்ணன், சாதி, மதத்தின் பெயரைக் குறிப்பிடவில்லை. பள்ளி நிர்வாகம், ஆனந்தகிருஷ்ணனிடம் சாதி, மதத்தைக் கேட்டபோது, ''எனக்கு மதமும்  சாதியும் இல்லை'' என்று துணிச்சலுடன் கூறினார். 

இதையடுத்து, சிநேகாவின் பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்களில் சாதியும் மதமும் குறிப்பிடவில்லை. அவருக்கு மட்டுமல்ல அவரின் சகோதரிகள் மும்தாஜ், ஜெனிஃபர் ஆகியோரின் சான்றிதழ்களிலும் மதமும் சாதியும் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில், வழக்கறிஞரான சிநேகாவுக்கும் காரைக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பார்த்திபராஜாவுக்கும் 3.7.2005-ம் ஆண்டு, புரட்சிகரமாகத் திருமணம் நடந்தது. 

 திருப்பத்தூர் வழக்கறிஞர் சிநேகா

வித்தியாசமான காதல்?

 சிநேகாவும் பார்த்திபராஜாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களின் காதல் வித்தியாசமானது. காரைக்குடியைச் சேர்ந்த பார்த்திபராஜா, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்தார். பிறகு திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரியில் தமிழ்த்துறையில் கடந்த 2003ம் ஆண்டு வேலைகிடைத்துள்ளது. நாடகக் கலை மீது ஆர்வம் கொண்ட பார்த்திபராஜா, கல்லூரியில் நாடகம் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது கல்லூரியின் சட்ட ஆலோசகராக சிநேகாவின் அப்பா வழக்கறிஞர் ஆனந்தகிருஷ்ணன், மணிமொழி ஆகியோர் இருந்துள்ளனர். பார்த்திபராஜாவின் நாடகத்தைப் பார்த்த அவர்கள் சிநேகாவிடம் தகவலைச் சொல்லியுள்ளனர். அப்போது, சிநேகா, சென்னை சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்ததும் பார்த்திபராஜாவைச் சந்தித்துப் பேசியுள்ளார். இருவருக்கும் ஒரே சிந்தனை, கருத்துகள் இருந்ததால் மனங்கள் இணைந்து காதலாக மாறியது. பெற்றோர் சம்மதத்துடன் தாலி கட்டாமல் சடங்குகள் எதுவும் நடைபெறாமல் உறுதிமொழியோடு திருமணம் நடந்துள்ளது. 

 திருப்பத்தூர் வழக்கறிஞர் சிநேகா

மூன்று குழந்தைகள் 

சிநேகாவுக்கும் பார்த்திபராஜாவுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளன. அவர்களுக்கு ஆதிரை நஸ் ரீன், ஆதிலா ஐரின், ஆரிஃபா ஜெஸ்சி எனப் பெயரிட்டனர். இவர்களின் பள்ளிச் சான்றிதழ்களிலும் சாதி, மதங்கள் குறிப்பிடவில்லை. இவர்கள் மூன்று பேரும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்துவருகின்றனர். இதுதான் வழக்கறிஞர் சிநேகாவின் குடும்பப் பின்னணி. 

இந்தியாவில் முதல் முறையாக சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை 9 ஆண்டுகளாகப் போராடி பெற்றுள்ளார் வழக்கறிஞர் சிநேகா. அவரிடம் பேசினோம். 

``என்னுடைய தந்தை 35 ஆண்டுகளுக்கு முன் விதைத்த விதைத்தான் இது. கடந்த 2010ம் ஆண்டில் சாதி, மத மற்றவர் என்ற சான்றிதழுக்காக சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது போல கிராம நிர்வாக அலுவவர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் ஆகியோரிடம்திருப்பத்தூர் வழக்கறிஞர் சிநேகா விண்ணப்பித்தேன். ஆனால், சாதிச் சான்றிதழைக் கொடுக்க மட்டுமே எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றுகூறி என்னுடைய விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். இருப்பினும் விடா முயற்சியோடு போராடினேன். எனக்கு சாதி, மத மற்றவர் என்ற சான்றிதழ் வழங்குவதால் யாருடைய இடஒதுக்கீடும் பறிபோகாது. மற்றவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என வருவாய்த் துறை அதிகாரிகளுடன் வாதாடினேன். பிறகு, 2017ல் மீண்டும் சாதி, மதமற்றவர் சான்றிதழைப் பெற விண்ணப்பித்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் அந்தச் சான்றிதழ் எனக்குக் கிடைத்துள்ளது. இது ஒரு விதை. நிச்சயம் விருட்சமாகும். என்னைப் போல மற்றவர்களும் இந்தச் சான்றிதழைப் பெற வழிபிறந்துள்ளது" என்றார். 

பார்த்திபராஜாவிடம் பேசினோம். ``நான் பிறப்பால் எனக்கு ஒரு சாதி இருந்தது. ஆனால் நான், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைளைப் பின்பற்றுபவன். இதனால், இடஒதுக்கீடு பெறாமல்தான் வேலையில் சேர்ந்தேன். என்னுடைய அப்பா, பள்ளி ஆசிரியர். அவர் முற்போக்குச் சிந்தனையாளர். தி.மு.க.வின் அனுதாபி. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். இதனால் என்னுடைய கருத்தை அவரிடம் விளக்கியபோது அவரும் புரிந்துகொண்டார். சிநேகாவை நான் காதலித்த தகவலை பெற்றோரிடம் கூறினேன். குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். எங்கள் திருமணத்தை கவிஞர் இன்குலாப் நடத்திவைத்தார். அவர் உறுதிமொழி வாசிக்க அதை நாங்கள் இருவரும் ஏற்றுக்கொண்டோம். திருமணம் சொர்க்கத்திலும் ரொக்கத்திலும் நிச்சயக்கப்படுவதில்லை, அது, வர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பதுதான் எங்களின் திருமண உறுதிமொழி" என்றார். 

 சாதிகள் இல்லையடி பாப்பா என்பதை திருப்பத்தூர் வழக்கறிஞர் சிநேகா நிரூபித்துக்காட்டியிருக்கிறார்.