`குழந்தைத் திருமணங்களைத் தடுக்க குழந்தைகளுடன் முதலில் உரையாடுங்கள்!’ - இயக்குநர் கரு.பழனியப்பன் | we have to put an end to child marriages - awareness program held in Chennai college

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (14/02/2019)

கடைசி தொடர்பு:17:50 (14/02/2019)

`குழந்தைத் திருமணங்களைத் தடுக்க குழந்தைகளுடன் முதலில் உரையாடுங்கள்!’ - இயக்குநர் கரு.பழனியப்பன்

குழந்தைத் திருமணம் இன்று வரை நடந்துகொண்டேதான் இருக்கிறது. குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதை வலியுறுத்தி யுனிசெஃப் மற்றும் தோழமை அமைப்பு சேர்ந்து நடத்திய மாநில அளவு விழிப்பு உணர்வு கருத்தரங்கம் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நேற்று (12.2.2019) நடைபெற்றது.

குழந்தைத் திருமணத்தால் ஏற்படும் பிரச்னை குறித்தும் அதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா ``மனித உரிமை என்பது குழந்தைகளின் உரிமைகளிலிருந்துதான் தொடங்குகிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 21(அ) கீழ் குழந்தைகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள கல்வி உரிமையை நிலைநிறுத்தினாலே குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒப்பானதாக இருக்கும். குழந்தைத் திருமணத்தை ஒழிப்பதற்கு முக்கியமான கடமை ஆண்களின் கையில்தான் இருக்கிறது. 18 வயதின் கீழ் உள்ள பெண்களைத் திருமணம் செய்ய மாட்டேன் என ஆண்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டாலே குழந்தைத் திருமணம் நடக்காமல் இருக்கும்’’ என்று கூறினார்.

குழந்தை திருமணம்

“இங்கே கூடியுள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் குழந்தைத் திருமணத்துக்கு நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், அப்பிரச்னைக்கான தீர்வை உண்டாக்க உங்களால் முடியும். குழந்தைகளுக்கு GOOD TOUCH BAD TOUCH சொல்லிக் கொடுப்பதை விட அவர்களுடன் முதலில் சாதாரணமாகப் பேச வேண்டும்.எந்தச் சமூகம் குழந்தைகளோடு உரையாடுகிறதோ அந்தச் சமூகத்தில்தான் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கும் நிலை உண்டாகும்.

நம் வீட்டில் நம் சமூகத்தில் குழந்தைகளோடு எத்தனை நேரம் உரையாடுகிறோம்?. நாம் உரையாடினால்தான் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள முடியும். அவர்களின் குரல் ஒலிக்க நாம் இடம் கொடுக்க வேண்டும். அதுதான் சமூக மாற்றத்துக்கான முதல் படி” எனத் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் பேசினார்.

தோழமை அமைப்பின் இயக்குநர் தேவநேயன் பேசியபோது, “குழந்தைத் திருமணம் கிராமங்களில் மட்டும்தான் நடக்கிறது என்று நினைக்க வேண்டாம். நகரத்திலும் அது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் பெருநகரங்களில், குழந்தைத் திருமணம் அதிகம் நடக்கும் இடங்களில் சென்னை இரண்டாவதாக உள்ளது. இது நமக்கு மிகவும் அவமானம்.

குழந்தை திருமணம்

20 வயதுக்கு மேல் திருமணம் புரிவோருடன் ஒப்பிடுகையில் மகப்பேறு மரணம் விகிதம் (INFANT MORTALITY RATE) குழந்தைத் திருமணம் செய்வதில் அதிகம் உள்ளது. அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அந்தக் கொடிய நிலைக்குத் தள்ளப்படும் குரலற்ற குழந்தைகளின் குரலாக நாம் இருக்க வேண்டும்'' என்றார்.

UNICEF அமைப்பைச் சேர்ந்த குமரேசன் பேசுகையில்,“தமிழகத்தில் வருடத்துக்கு 80,000 குழந்தைத் திருமணம் நடைபெறுகிறது. குழந்தைத் திருமணத்துக்கு எதிராக 9 சட்டங்கள் உள்ளன. அதைப் பற்றி மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும். எங்கேனும் குழந்தைத் திருமணம் நடந்தால் அதைத் தடுக்க 1098 என்ற தொலைபேசி எண் மூலம் ‘சைல்ட் லைன்’க்குத் தகவல் சொன்னால் போதும்’’ என்று வலியுறுத்தினார்.

600 பேர் கலந்துகொண்ட இக்கருத்தரங்கத்தில், மாணவர்கள் நாடகம் மூலமாகவும் மைம் மூலமாகவும் குழந்தைத் திருமணத்தைத் தடுக்க விழிப்பு உணர்வு செய்தனர். திரைப்படத்தில் பள்ளி மாணவர்கள் காதிலிக்கும்படி சித்திரிக்க வேண்டாம் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது

 


[X] Close

[X] Close