`எங்களுக்கு எழுதிக் கொடுத்தவர்தான் உங்களுக்கும்..!’ - ஓ.பி.எஸ்-ஸைக் கலாய்த்த துரைமுருகன் | DMK MLA Durai Murugan and OPS conversation creates laughter in Assembly

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (14/02/2019)

கடைசி தொடர்பு:18:20 (14/02/2019)

`எங்களுக்கு எழுதிக் கொடுத்தவர்தான் உங்களுக்கும்..!’ - ஓ.பி.எஸ்-ஸைக் கலாய்த்த துரைமுருகன்

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதிநாளான அவையில் காரசார விவாதமும் சிரிப்பலையும் எழுந்தது.

பன்னீர்செல்வம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை கடந்த வாரம் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அன்றுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்தவிவாதத்தில் அ.தி.மு.க, தி.மு.க இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றன. இருகட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டன. இந்நிலையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் கடைசி நாளான இன்று, `யாருடைய ஆட்சியில் பட்ஜெட்டுக்காகக் கூடுதல் கடன் பெறப்பட்டது என்பதைப் புள்ளி விவரத்தோடு, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாசித்துக்கொண்டிருந்தார்.

துரைமுருகன்

இடையே தி.மு.க எம்.எல்.ஏ துரைமுருகனைப் பார்த்தவர், `அண்ணன் இப்போதுதான் என்னைக் கூர்ந்து கவனித்து வருகிறார்' என்று பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்ட துரைமுருகன், ``கூர்ந்தெல்லாம் கவனிக்கவில்லை. கடந்த தி.மு.க ஆட்சியில் உங்களை எப்படிக் குறை கூறுவது என இதே நிதித்துறை செயலாளர்தான் எங்களுக்கு எழுதிக்கொடுத்தார். இப்போது எங்களை எப்படிக் குறை கூறுவது என உங்களுக்கு எழுதிக் கொடுத்துள்ளார். அதைத்தான் சிந்தித்து வருகிறேன். வேறொன்றும் இல்லை'' என்று கூற அவையில் சிரிப்பலை எழுந்தது.’’ மேலும், நாங்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஒன்று மட்டும்தான், சபாநாயகர் எப்போது இத்துடன் இன்றைய நிகழ்ச்சிகள் முடிகிறது எனச் சொல்லுவார் என்பதுதான் அது'' என்றார் கலகலப்பாக! அதற்குப் பதிலளித்த ஓ.பி.எஸ், ``நான் புள்ளி விவரத்தோடு பேசுவதை துரைமுருகனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' எனத் துரைமுருகனை சீண்டினார்.


[X] Close

[X] Close