``நான் ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே என்னைக் காதலிச்சார்!’’ - `திருநங்கை’ இலக்கியா | transgender ilakiya talks about her personal

வெளியிடப்பட்ட நேரம்: 18:58 (14/02/2019)

கடைசி தொடர்பு:19:38 (14/02/2019)

``நான் ஆப்ரேஷன் பண்றதுக்கு முன்னாடியே என்னைக் காதலிச்சார்!’’ - `திருநங்கை’ இலக்கியா

''நாங்க வாழுற இந்த வாழ்க்கைக்கான சான்று என் பையன் சக்தி பிரியன் தான்மா'' எனப் புன்னகைக்கிறார் திருநங்கை இலக்கியா. திருமணமாகி 10 ஆண்டுகளாகத் தன்னுடைய காதல் கணவருடன் வாழ்ந்து வரும் இவர் தன்னுடைய கடந்தகால வாழ்க்கை பக்கத்தின் வலியை நம்மிடையே பகிர்ந்துகொள்கிறார்.

திருநங்கை இலக்கியா

``நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். எங்க வீட்டுல எனக்கு வைச்ச பெயர் இளையராஜா. எனக்கு ஒரு அக்கா, இரண்டு அண்ணா இருக்காங்க. என்னுடைய 7 வயசுல இருந்தே பெண்ணாகவேதான் நடந்துப்பேன். ஆண்கள் விளையாடுற விளையாட்டு எதுவும் எனக்குப் பிடிக்காது. என் அக்காகூட எங்க வீட்டு வேலையைச் செய்ய மாட்டா. நான் ஒவ்வொரு வேலையையும் இழுத்துப் போட்டு செய்வேன். என் அப்பா, அம்மா சொந்தக்காரங்க எல்லோரும் திட்டியிருக்காங்க. ஆனாலும், என்னால அந்தக் குணத்தை மாத்திக்க முடியலை. 6-ம் வகுப்பு படிக்கும்போது என்னை மாதிரி திருநங்கையா இருக்கிறவங்களைச் சந்திச்சேன். ஆனாலும், அப்போ அவங்ககிட்ட என்னைப் பற்றி எதுவும் சொல்லிக்கலை. எட்டாவது படிக்கும்போது அவங்ககூட சேர்ந்தேன். அப்புறம் 10-ம் வகுப்பு பாதியிலேயே ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு சொல்லிட்டு சமையல் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.

என் அண்ணன்கள் என்னுடைய நடவடிக்கையைப் பார்த்து கண்டிச்சிட்டே இருப்பாங்க. வேலைக்குப் போகும்போது முடி விட ஆரம்பிச்சேன். ஐபுரோ திரெட்டிங் பண்ணிக்கிட்டேன். அதுவரைக்கும் நான் மாறிடுவேன்னு எங்க வீட்டுல நினைச்சிருந்தவங்க என்னை திரெட்டிங் பண்ணி பார்த்ததும் ரொம்ப டென்ஷன் ஆகிட்டாங்க. ரொம்ப அடிச்சாங்க. ஆனாலும், என்னால என்னை மாத்திக்கவே முடியலை. அந்தச் சமயம்தான் அவர் எனக்கு அறிமுகமானார்'' எனத் தன்னுடைய கணவர் மூர்த்தியை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். 

திருநங்கை இலக்கியா

``என் அண்ணன் கூட வேலை பார்த்தவர் மூர்த்தி. என் அண்ணன் நான் இப்படி நடந்துக்குறேன்னு அவர்கிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்காங்க. அவர் என்கிட்ட வந்து ஏன் இப்படி நடந்துக்குறன்னு கேட்டார். நான் இப்படிதான் நடந்துப்பேன்... என்னால ஆணாக வாழ முடியலைன்னு சொன்னேன். அதுக்கப்புறம் நானும் அவரும் பேச ஆரம்பிச்சோம். என்னுடைய 16 வயசுல அவர் எனக்கு அறிமுகமானார். ரெண்டு பேரும் நிறைய பேசினோம். என்னை அவர் ஃப்ரெண்ட்னு சொல்லிட்டு நிறைய இடத்துக்குக் கூட்டிட்டுப் போவார். திடீர்னு ஒரு நாள் என்னை லவ் பண்றேன்னு சொன்னார். அந்த சமயம் நான் ஆப்ரேஷன்கூட பண்ணலை'' என்றவர் ஒரு நொடி மெளனத்துக்குப் பின் தொடர்ந்தார்.

``என்கிட்ட அவர் காதலை சொல்லும்போது அவருக்கு கல்யாணமாகி ஒரு பொண்ணு, ஒரு பையன் இருந்துச்சு. அதனால எனக்குள்ள ஒரு தயக்கம் இருந்துச்சு. நான் அவர்கிட்ட அதுக்கப்புறம் எதுவும் பேசிக்கலை. வேலைக்குப் போய் சம்பாதிச்ச காசை வைச்சு ஆப்ரேஷன் பண்ணேன். வீட்டைவிட்டு ஓடிப்போய் ஆப்ரேஷன் பண்ணி எங்க ஆளுங்க கூட இருந்தேன். என்னைக் கண்டுபிடிச்சு எங்க வீட்டுல இருந்து வந்து என் புள்ளையா இருந்தா போதும்... வீட்டுக்கு வான்னு என்னைக் கூட்டிட்டு வந்துட்டாங்க. ஆப்ரேஷன் முடிஞ்சு என்னை எங்க வீட்டுல தான் ஃபுல்லா பார்த்துக்கிட்டாங்க. ஆப்ரேஷன் பண்ணதுக்கு அப்புறமும் என்னை வேஷ்டி கட்டச் சொன்னாங்க. கிட்டத்தட்ட நாலு வருஷம் வேஷ்டிலேயேதான் இருந்தேன். அத்தனை வருஷம் மூர்த்தி எனக்காக வெயிட் பண்ணாரு. அப்புறம் நானும் அவரைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன். 

திருநங்கை இலக்கியா

என்னுடைய 21 வயசுல வீட்டைவிட்டு வெளியே வந்து இவர் கூடவே இருந்தேன். அதுக்கப்புறமாகத்தான் புடவை கட்டினேன். அவருடைய முதல் மனைவி கேஸ் கொடுத்தாங்க. ஸ்டேஷன்ல நிறைய பிரச்னை நடந்துச்சு. அவர் என்னை விட்டுக் கொடுக்கவே இல்லை. அப்புறம் அவங்க மனைவி எங்களைப் புரிஞ்சிக்கிட்டாங்க. இப்போகூட நான் அவங்க வீட்டுலதான் இருக்கேன். அவங்களும் எங்க வீட்டுக்கு வருவாங்க. இப்போ நாங்க எல்லோருமே சந்தோஷமா இருக்கோம்.

சின்ன வயசுல இருந்தே ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கணுங்குறது என் கனவா இருந்துச்சு. என் வீட்டுக்காரர்கிட்டேயும் சொல்லிட்டே இருந்தேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்க சொந்தக்காரங்ககிட்டயிருந்து ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பிச்சோம். அவனுக்குச் சக்தி பிரியன்னு பெயர் வைச்சிருக்கோம். எங்க வீட்டு ராசாவுக்கு நாலு வயசாகுது. அவர்தான் எங்களுடைய உலகம். எல்லா பெண்களை மாதிரியும் சராசரியான குடும்பத் தலைவியா ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன்மா... காதல்ங்குற ஒண்ணு இல்லைன்னா என் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்னே தெரியலை'' எனப் புன்னகைக்கிறார் இலக்கியா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close