`சின்னத்தம்பி யானைக்கு கூண்டில் அடைத்து பயிற்சி கொடுக்கப்படும்!' - வனத்துறை அதிகாரி பேட்டி | Will catch Chinnathambi elephant, says FD

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (14/02/2019)

கடைசி தொடர்பு:20:30 (14/02/2019)

`சின்னத்தம்பி யானைக்கு கூண்டில் அடைத்து பயிற்சி கொடுக்கப்படும்!' - வனத்துறை அதிகாரி பேட்டி

சின்னத்தம்பி யானையைப் பிடித்து கூண்டில் அடைத்து பயிற்சி கொடுக்கப்படும் என்று ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர்  கணேசன் கூறியுள்ளார்.

சின்னத்தம்பி

கோவையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட சின்னத்தம்பி யானையை, மீண்டும் பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சின்னத்தம்பி யானையைப் பிடிப்பதற்கான முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சின்னத்தம்பிக்கு துன்புறுத்தல் இல்லாமல், பிடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சின்னத்தம்பியைச் சுற்றி விளைநிலங்கள் இருப்பதால், அதை எப்படி பிடிப்பது என்று வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். ஜே.சி.பி-யை வைத்து வழித்தடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கணேசன் கண்ணாடிப்புத்தூர் பகுதியில் சின்னத்தம்பி ஆபரேஷன் தொடர்பாக ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``நீதிமன்றம் மற்றும் தலைமை வனக் காப்பாளர் உத்தரவுப்படி, சின்னத்தம்பி யானை மயக்க ஊசி செலுத்திப் பிடித்து, வரகழியார் யானைகள் முகாமில் விடப்படும். சின்னத்தம்பியைப் பிடிப்பதற்காக மருத்துவக்குழு, வாகனம் வந்துகொண்டிருக்கிறது. இரவுக்குள் அனைத்தும் தயாராகிவிடும். தேவைப்பட்டால் கூடுதலாக கும்கி யானைகள் கொண்டுவரப்படும். கும்கி யானைகள், சின்னத்தம்பி யானையை லாரியில் ஏற்றுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். களநிலவரத்தைக் கண்காணித்து வருகின்றோம். யானைக்கும், மக்களுக்கும் பிரச்னை இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

சின்னத்தம்பி

சின்னத்தம்பி யானையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். யானையைப் பத்திரமாகக் கொண்டு போக வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. யானையின் நடவடிக்கைகளைப் பார்த்து உரிய  நடவடிக்கை எடுக்கப்படும்.
சின்னத்தம்பி யானையை மீண்டும் காட்டில் விடப்போவதில்லை. கைதேர்ந்த யானைப் பாகன்கள் உதவியுடன், கூண்டில் வைத்து சின்னத்தம்பிக்கு பயிற்சி அளிக்கப்படும். இரண்டு மாத பயிற்சிக்குப் பின்னர், டாப்ஸ்லிப் கோழிக்கமுதி யானைகள் முகாமில் சின்னத்தம்பி யானை விடப்படும்" என்றார்.


[X] Close

[X] Close