மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்! | new vice chancellor has been appointed for ms university by governor

வெளியிடப்பட்ட நேரம்: 22:10 (14/02/2019)

கடைசி தொடர்பு:22:10 (14/02/2019)

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமனம்!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் ஆளுநரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 

புதிய துணைவேந்தர் பிச்சுமணி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பாஸ்கர் ஓய்வுபெறுவதையொட்டி புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் நடவடிக்கைகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தன. இது தொடர்பாக ஆளுநரால் அமைக்கப்பட்ட குழுவினர், தகுதியின் அடிப்படையில் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், புதிய துணைவேந்தராக டாக்டர் கே.பிச்சுமணி அறிவிக்கப்பட்டார். 

இது தொடர்பாக ஆளுநர் அலுவலகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதால் கே.பிச்சுமணி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அவர் இந்தப் பொறுப்பில் 3 ஆண்டுக் காலம் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் கே.பிச்சுமணி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறைத்தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார். 

அத்துடன், காமராசர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பொறுப்பையும் வகித்த அனுபவம் மிகுந்தவர். சிண்டிகேட் மற்றும் செனட் உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். வேதியியல்  துறையில் புலமை வாய்ந்த அவர் 3 புத்தகங்களை எழுதியுள்ளார். பல்வேறு நாடுகளில் இருந்து வெளியாகும் அறிவியல் புத்தகங்களில் 190-க்கும் அதிகமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதி இருக்கிறார். அறிவியல் துறை சார்ந்த பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் அழைப்பின் பேரில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவமும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


[X] Close

[X] Close