`அன்னவாசல் ஜல்லிக்கட்டுக்கு பேனர் வைக்க இடமில்லை!’ - பிடுங்கி எறியப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் | Jallikattu organizers demolishes hundreds of tree saplings, alleges annavasal youths

வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (14/02/2019)

கடைசி தொடர்பு:21:50 (14/02/2019)

`அன்னவாசல் ஜல்லிக்கட்டுக்கு பேனர் வைக்க இடமில்லை!’ - பிடுங்கி எறியப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்

ன்னவாசலில் இளைஞர்கள் பலர் இணைந்து நிழலுக்காக நட்ட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் மற்றும் மரப்போத்துகள் அனைத்தும், ‘பேனர் வைக்க இடமில்லை’ என்று கூறி பிடுங்கி எறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

துளிர்விட்ட மரம்

வளர்ந்திருந்த மரம்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இருக்கிறது விருத்தபுரீசுவரர் ஆலயம். மாசித் தேர் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு https://www.vikatan.com/news/tamilnadu/148726-jallikattu-is-being-held-in-tirupur.html ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 18-ம் தேதி) நடைபெற இருக்கிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் பெரியகுளம் ஏரி சுமார் நான்கு கி.மீ நீளம் கொண்டது. நான்கு ஊர்களுக்குச் சொந்தமான ஏரி இது. இங்கு கரையைச் சுற்றிலும் நிழலுக்காக நடப்பட்டிருந்த ஆலமரம், அரசமரம், வேப்பமரம் ஆகிய மரக்கன்றுகள் மற்றும் மரப்போத்துகள் அனைத்தையும் பிடுங்கி எறிந்திருக்கிறார்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் விழாக்கமிட்டியும், பேரூராட்சி நிர்வாகமும்.

ஜல்லிகட்டு திடல்

இதுகுறித்து மரப்போத்துகளை நட்ட அன்னவாசலைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசினோம். ``போன வருஷம் ஜல்லிக்கட்டு நடந்தப்போ வி.ஐ.பி-க்களுக்கு மட்டும் மேடை போட்டுருந்தாங்க. வேடிக்கை பார்த்த மக்கள் எல்லாரும் வெயில்ல நின்னு கஷ்டப்பட்டாங்க. ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்கற இடம், பாதுகாப்பு பேரிகார்டு எங்க வைக்கறாங்கனு எல்லாத்தையும் அளவெடுத்து போட்டிக்கு எந்தவித இடையூறும் ஏற்படாதபடிதான் மரம் நட்டோம். மரக்கன்று வச்சா வளர நேரம் ஆகுமுன்னு மரக்கிளைகள வெட்டி போத்துகளா உருவாக்கி ஆறு மாசத்துக்கும் முன்னாடி நட்டோம்.

ஆறு மாசத்துக்கு மேல தினமும் தண்ணி ஊத்தி, வேலி அமைச்சி வளர்த்தோம். எல்லா மரமும் துளிர்த்திடுச்சி, `ஜல்லிக்கட்டுக்கு வி.ஐ.பி-க்கள், அமைச்சர்கள், அரசியல்வாதிகள் வராங்க. அவுங்கள வரவேற்று பேனர் வைக்கணும். அதுக்கு இந்த மரங்கள் எடஞ்சலா இருக்கு’னு சொல்லி எல்லா மரத்தையும் புடிங்கி போட்டுட்டுட்டாங்க விழாவ நடத்தற பேரூராட்சி நிர்வாகமும், விழாக்கமிட்டி காரவங்களும். குழந்தை மாதிரி வளர்த்தோம். இப்போ அந்த மரப் போத்துங்க எங்க கிடக்குன்னே தெர்ல. மரம் நட்ட இடமே பொட்டவெளியா கிடக்கு இப்போ. ஜல்லிக்கட்டு முடிஞ்சதும் ஏரிய சுத்தி நடுவதற்காக சுமார் நானூறு மரப்போத்துகள தயார் பண்ணி வச்சிருக்கோம். அந்த போத்துகள நட்டா பயன் இருக்குமான்னு இப்போ சந்தேகமா இருக்கு” என்று வருத்தத்துடன் கூறினார்கள். 

பிடுங்கி எறியப்பட்ட மரங்கள்

இதுதொடர்பாக விளக்கம் கேட்பதற்காக அன்னவாசல் ஜல்லிக்கட்டு விழாக்கமிட்டியினரை தொடர்புகொண்டு பேசினோம். ``போட்டி நடத்தற மைதானத்த ஏற்பாடு செய்யறது பேரூராட்சி நிர்வாகம்தான். அவுங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கறதுதான் எங்க வேலை. வேற எதுவும் எங்களுக்குத் தெரியாது’’ என்றதோடு முடித்துக்கொண்டார்கள். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close