மாமல்லபுரத்தில் தி.மு.க-வுக்கு புதிய அலுவலகம்! - பத்திரப்பதிவை நிறைவு செய்த ஸ்டாலின் | DMK plans to construct new party office near Mamallapuram

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (14/02/2019)

கடைசி தொடர்பு:17:23 (16/02/2019)

மாமல்லபுரத்தில் தி.மு.க-வுக்கு புதிய அலுவலகம்! - பத்திரப்பதிவை நிறைவு செய்த ஸ்டாலின்

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே புதிய கட்சி அலுவலகத்தைக் கட்ட தி.மு.க தலைமை திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

அண்ணா அறிவாலயம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் தி.மு.கவின் தலைமை அலுவலகமாகச் செயல்பட்டு வருகிறது. பல்வேறு இடர்பாடுகளைக் கடந்து கட்டப்பட்ட அண்ணா அறிவாலயம், கடந்த 16-9-1987-ல் திறப்பு விழா கண்டது. கருணாநிதியால் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் தி.மு.க-வின் வளர்ச்சியின் பல்வேறு படிநிலைகளை சுமந்து நிற்கிறது. 

இந்தநிலையில், கட்சியினரின் வசதிக்காக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே புதிய கட்சி அலுவலகத்துக்கான இடம் திராவிட முன்னேற்றக் கழகம் டிரஸ்ட் என்ற பெயரில் வாங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க வட்டாரத்துக்கு நெருக்கமான சிலர், ``காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் கடம்பாடி மற்றும் பெருமாளேரி என்ற கிராமங்கள் இருக்கின்றன. கடம்பாடியில் 2 ஏக்கர் 39 சென்ட் மற்றும் பெருமாளேரியில் 9 ஏக்கர் 90 சென்ட் என மொத்தம் 12 ஏக்கர் 29 சென்ட் இடம் `திராவிட முன்னேற்றக் கழகம் டிரஸ்ட்’ பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. 

திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஸ்டாலின்

அறக்கட்டளையின் தலைவர் என்கிற முறையில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்து அந்த இடங்களுக்கான பத்திரப்பதிவு வேலைகளை இன்று மேற்கொண்டார். பத்திரப்பதிவுக்காக இன்று மாலை 4 -4.30 மணியளவில் திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு ஸ்டாலின் சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, எ.வ.வேலு மற்றும் காஞ்சிபுர வடக்கு மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றிருந்தனர். அந்த இடங்கள் தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமியின் உதவியாளரான எஸ்.ஆர். என்று அழைக்கப்படும் எஸ்.ராஜேந்திரனுக்குச் சொந்தமானது. அவரது கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலம், தி.மு.க டிரஸ்ட் பெயரில் வாங்கப்பட்டிருக்கிறது. இதற்கான பத்திரப்பதிவு வேலைகள் நிறைவு பெற்றிருக்கின்றன.  

திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகம்

இந்த நிலத்தைக் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே வந்து பார்வையிட்ட ஸ்டாலின், ஓகே செய்துவிட்டார். இடத்தின் உரிமையாளர் எஸ்.ராஜேந்திரன் என்று தெரியவரவே, `அவரிடம் நானே பேசுகிறேன்’ என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதன்படி இன்று தி.மு.க அறக்கட்டளை பெயரில் நிலம் வாங்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் கட்சியின் புதிய அலுவலகத்தைக் கட்ட தலைமை திட்டமிட்டிருக்கிறது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், பொதுக்குழு, செயற்குழு என கட்சி நிகழ்ச்சிகளை இங்கேயே நடத்தவும் தலைமை முடிவு செய்திருக்கிறது. 

திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் தேசியத் தலைவர்கள் மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்கும் நிகழ்வுகளை மட்டுமே நடத்திக் கொள்ளத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் அண்ணா அறிவாலயத்தில் நடத்துகையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. புதிதாகக் கட்சி அலுவலகம் அமைய இருக்கும் இடம், கிழக்குக் கடற்கரை சாலை மற்றும் ஜி.எஸ்.டி சாலை ஆகியவற்றுக்கு அருகில் அமைந்திருப்பதால் தொண்டர்கள் வந்து செல்வதற்கும் வசதியாக இருக்கும். இரண்டு ஆண்டுகளில் இந்தப் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.கவுக்கு ஏற்கெனவே காஞ்சிபுரம் நகரில் இடம் இருக்கிறது. ஆனால், காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.கவுக்கு சொந்தமாக இடம் இல்லை. அப்படி இந்த இடம் காஞ்சி மாவட்ட தி.மு.கவுக்காக வாங்கப்பட்டிருக்கிறது என்றால், மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் மட்டும் வந்திருந்தால் போதுமானது. தலைவர் ஸ்டாலின் வரவேண்டிய அவசியம் இல்லையே’’ என்கின்றனர் பொறுமையாக.


[X] Close

[X] Close