‘பலதரப்பட்ட இடையூறுகள் உள்ளன’ - நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த காவல்துறை | police closed the court door for stop nirmaladevi speech

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (15/02/2019)

கடைசி தொடர்பு:05:30 (15/02/2019)

‘பலதரப்பட்ட இடையூறுகள் உள்ளன’ - நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த காவல்துறை

நிர்மலாதேவி

பேராசிரியர் நிர்மலாதேவி பேசினால் அரசியலில் உள்ள முக்கிய நபர்கள் பலர் சிக்குவார்கள் என்பதால் அவரை பேசவிடாமல் தடுக்க காவல்துறையினர் நீதிமன்ற வாயில் கதவுகளை பூட்டினர்.

நிர்மலா தேவி

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த முறை ஆஜராக வந்த நிர்மலாதேவி நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. காவல்துறையினர் மிரட்டி என்னிடமிருந்து வெற்றுத்தாளில் மட்டுமே கையெழுத்து வாங்கினர் என தெரிவித்தார். அவரது இந்த பேச்சால் ஒட்டுமொத்த காவல்துறையினரும், தமிழக அரசும் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

 

அடுத்த முறை இவர் யாரிடமும், எந்த தகவலையும் கூறிவிடக் கூடாது என்பதில் அரசும், காவல்துறையினரும் தெளிவாக இருந்தனர். எனவே திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் என்றும் இல்லாத வகையில் நேற்று பலத்த போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது. டி.எஸ்.பி. ராஜா தலைமையில், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீஸ்

நீதிமன்றத்துக்குள் செல்லும் வாயில்களை அடைத்து செய்தியாளர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். செய்தியாளர்களுடன் தகராறு செய்து கொண்டிருக்கும் போதே காவல்துறையினர் அவரை வேறு வழியில் மேலே அழைத்துச் சென்றனர். மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுமதி சாய்பிரியா முன் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் நிர்மலாதேவியை அழைத்து வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் ஏதோ பேச முயன்ற அவரைச் சுற்றி வளைத்த காவலர்கள் எதுவும் பேசவிடாமல் தடுத்தபடி பெண் காவலர்கள் வேனுக்கு இழுத்துச் சென்றனர். அவர் வாய்திறந்தால் அரசியலில் உள்ள முக்கிய நபர்கள் பலர் சிக்குவார்கள் என்பதால் அவரை வேனில் ஏற்றியவுடனேயே ஜன்னல் கதவுகளை அடைத்துவிட்டு வேகமாக அழைத்துச் சென்றனர். பலதரப்பட்ட இடையூறுகள் உள்ளன என்ற ஒற்றை வார்த்தையை கூறிய அவரை அடுத்த வார்த்தை பேசவிடாமல் தடுத்துவிட்டனர்.

நீதிமன்றம்

காவல்துறை ஆய்வாளர்கள் பவுல் யேசுதாசன், காந்தி, காவலர் சின்னதுரை ஆகியோர் செய்தியாளர்களுடன் ஆரம்பத்தில் இருந்து தகராறு செய்து கொண்டே இருந்தனர். அவர்களின் தாக்குதலில் சன் தொலைக்காட்சி செய்தியாளர் மணிகண்டன் கை மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டது. விகடன் புகைப்படக்காரரின் கேமரா, நக்கீரன் செய்தியாளரின் கடிகாரம் ஆகியவை கீழே விழுந்து உடைந்தன. இதனால் செய்தியாளர்களுக்கும், காவலர்களுக்கும் நீதிமன்ற வளாகத்துக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மணிகண்டன் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வழக்கறிஞர்

கடந்த முறை நிர்மலாதேவி பேசியதால் மருத்துவமனையிலும், சிறையிலும் அவருக்கு பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வழக்கின் பின்னணி குறித்து பேச இருந்தார். ஆனால் அவர் பேசினால் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், துணைவேந்தர் வெளியே வருவார்கள் என்பதால் தான் வெடிகுண்டு வழக்கில் உள்ளவர்களுக்கு இல்லாத வகையில் பலத்த பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரும், குடும்பத்தினரும் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருகின்றனர். அவர் பேசினால் எல்லா உண்மைகளும் வெளியே வரும் என அவரது வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் தெரிவித்தார்.


[X] Close

[X] Close