காதலர்கள் ஜோடியாக செல்வதற்கு தடை- வெறிச்சோடிய சித்தன்னவாசல்! | The love pair is banned in Sittannavasal Cave

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (15/02/2019)

கடைசி தொடர்பு:03:00 (15/02/2019)

காதலர்கள் ஜோடியாக செல்வதற்கு தடை- வெறிச்சோடிய சித்தன்னவாசல்!

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சுற்றுலாத்தலத்திற்குள் காதலர்கள் ஜோடியாகச் செல்ல போலீஸாரால் தடை விதிக்கப்பட்டதால், ஒவ்வொரு வருடமும் காதலர் தினத்தன்று, காதலர்களால் திக்குமுக்காடும், சித்தன்னவாசல் சுற்றுலாத்தலம் இந்த வருடம் காதலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் சுற்றுலாத்தலம் உள்ளது. இங்கு உலக  புகழ்பெற்ற குகை ஓவியங்கள் நம்மை பிரமிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சமணர் படுக்கைகள் உள்ளிட்ட வரலாற்று சின்னங்கள் இங்கு உள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் பூங்கா, படகு சவாரி, நீரூற்று உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.சுற்றுலாத்தலம் தற்போது முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு உள்ளதால், தினமும் குடும்பத்துடன் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். அதே நேரத்தில் காதலர்களும் அதிகளவில் வருகின்றனர்

 இந்த நிலையில், சித்தன்னவாசல் சுற்றுலாத்தலத்திற்கு வரும் காதலர்கள் பலரும் ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதும், மலை உச்சிக்குச் சென்று ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுப்பதும், சிலர் அநாகரிக செயல்களில் ஈடுபடுகின்றனர். இது சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கின்றது. எனவே அது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காதலர் தினத்தன்று காதலர்களை அனுமதிக்கக்கூடாது எனச் சமூக ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து, அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான 20க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  நுழைவு வாயில், பூங்கா, சமணர் படுகைகள் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், கடுமையான கெடுபிடிகளுக்கு பிறகே சுற்றுலா பயணிகளை உள்ளே அனுப்பினர். ஜோடியாகக் காதலர்கள் உள்ளே செல்வதற்குத் தடை விதித்தனர்.

இதுகுறித்து காதலர்கள் சிலரிடம் பேசினோம்,   "ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்தமாகக் காதலர்கள் அனைவருமே தவறானவர்கள் என்று விரட்டி அடிக்கின்றனர். இயற்கையை ரசிக்கவும், எங்களது அன்பைப் பரிமாறிக்கொள்ளவும், மனம் விட்டுப் பேசவும் இதுபோன்ற சுற்றுலாத்தலங்களுக்கு வருகிறோம். எங்களைக் குற்றவாளிகள் போல் போலீஸார் விரட்டி அடிக்கின்றனர்" என்று புலம்பினர்.

இதுகுறித்து காவல்துறையிடம்  கேட்டபோது,   " தொடர் புகார்கள் வந்ததன் பேரில், சித்தன்னவாசலில் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்" என்றனர்.


[X] Close

[X] Close